விருத்தாசலம், : வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்து கொண்டதாக பெண்ணின் கணவர் மற்றும் உறவினர்களை கைது செய்யக்கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர்.கடலுார் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த இருளக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் சிவா, 30; இவர் மங்கலம்பேட்டையில் சர்வேயராக உள்ளார்.
இவரது மனைவி மணிபாரதி, 21; இரண்டு ஆண்டுகளுக்கு முன் திருமணமானது. ஒரு மகன் உள்ளார்.கடந்த வாரம் குடும்ப பிரச்னை காரணமாக, தொப்புளிக்குப்பம் கிராமத்தில் உள்ள தாய் வீட்டிற்கு மணிபாரதி சென்றார். நேற்று முன் தினம் வீட்டில் இருந்த பூச்சி மருந்தை குடித்து மயங்கினார். விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இறந்தார்.
உறவினர்கள் மறியல்
இந்நிலையில் மணிபாரதியின் உறவினர்கள் 100 க்கும் மேற்பட்டோர், நேற்று மாலை 4:30 மணிக்கு விருத்தாசலம் ஆர்.டி.ஓ., அலுவலகம் முன் கடலுார் சாலையில் அமர்ந்து திடீர் மறியலில் ஈடுபட்டனர். கணவர் சிவா, மாமியார் அமுதா, நாத்தனார் தேவி ஆகியோர் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதால் மணிபாரதி தற்கொலை செய்து கொண்டார். அவர்களை உடனடியாக கைது செய்ய கூறினர்.விருத்தாசலம் போலீசார், உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதனால் விருத்தாசலம் - கடலுார் சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.