கண்டமங்கலம் : கண்டமங்கலம் அருகே காணாமல் போன பெண் மீன் வியாபாரி அழுகிய நிலையில் உடல் கண்டெடுக்கப்பட்டது. கொலை செய்யப்பட்டாரா என போலீசார் விசாரித்து வருகின்றனர்.விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம், துலுக்காநத்தம் காலனியைச் சேர்ந்தவர் அய்யாவு.
இவரது மனைவி முத்தம்மாள், 55; மீன் மற்றும் கருவாடு வியாபாரம் செய்து வந்தார். இவரை கடந்த 11ம் தேதி முதல் காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.அவரது மகன் ராஜிவ்காந்தி, 34; அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வந்தனர்.இந்நிலையில் நேற்று மாலை 3:30 மணியளவில் ராஜிவ்காந்தி பாக்கம் கிராமத்தில் இருந்து துலுக்காநத்தம் செல்லும் சாலையில் கரும்புத் தோட்டத்திற்கு சென்று பார்த்தபோது முத்தம்மாள் மீன் வியாபாரத்திற்கு பயன்படுத்தும் அன்னக்கூடை கிடப்பதைப் பார்த்துள்ளார்.அருகே சென்று பார்த்தபோது, முத்தம்மாள் அழுகிய நிலையில் கிடந்தது தெரியவந்தது.கண்டமங்கலம் இன்ஸ்பெக்டர், ரத்தினசபாபதி, சப் இன்ஸ்பெக்டர் பிரேம்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று முத்தம்மாள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
முத்தம்மாளுக்கு மீனா, 40; வெள்ளை யம்மாள், 38; பாப்பாத்தி, 32; என 3 மகள்களும், ராஜிவ்காந்தி, 34; என்ற மகனும் உள்ளனர். அனைவரும் திருமணம் ஆனவர்கள். கடந்த 2 ஆண்டுக்கு முன் ராஜிவ்காந்தி குழந்தைகளுக்கு காதணி விழா நடந்துள்ளது.அந்த விழாவில் முத்தம்மாளுக்கு 3 மகள்களும், மகனும் சேர்ந்து 5 சவரன் தாலி சரடு வாங்கிக் கொடுத்துள்ளனர். இது தவிர இரண்டரை சவரன் அளவிற்கு கம்மல், மூக்குத்தி மற்றும் 250 கிராம் வெள்ளிக்கொலுசும் அணிந்திருந்துள்ளார்.தாலிச் செயின் உட்பட அனைத்து நகைகளையும் சேர்த்து அவர் 3 லட்சம் ரூபாய் மதிப்பில் நகைகள் அணிந்திருந்துள்ளார்.
தினமும் அவர் வியாபாரத்திற்குச் சென்று மாலை அல்லது இரவு நேரங்களில் பைக்கில் வருபவர்களிடம் லிப்ட் கேட்டு வருவதை வழக்கமாக கொண்டாடிருந்தார்.அதுபோன்று வந்தபோது மர்ம நபர் நகைகளுக்காக கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.