புதுச்சேரியின் பொருளாதாரம் சுற்றுலாவை சார்ந்தே உள்ளது. இதன் காரணமாக, மாநிலத்தில் மது விற்பனை எளிதாக்கப் பட்டுள்ளது.வீதிதோறும் என புதுச்சேரி பிராந்தியத்தில் மட்டும் மொத்தம் 314 மதுபானக் கடைகள் உள்ளன.குறிப்பாக, 'குடிமகன்'களை கவரும் வகையில் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் ஏராளமான மதுக்கடைகள் இயங்கி வந்தன.
சாலையோரங்களில் இயங்கி வரும் மதுபானக் கடைகளால் வாகன விபத்துகள் ஆண்டுதோறும் அதிகரித்து வருவதாக, பா.ம.க., சார்பில் பொது நல வழக்கு தொடரப்பட்டது.வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், நெடுஞ்சாலையில் இருந்து 500 மீட்டர் துாரத்திற்குள் உள்ள மதுக்கடைகளை உடனடியாக அகற்ற வேண்டும் என, கடந்த 2016ம் ஆண்டு உத்தரவிட்டனர்.அதன்பேரில், புதுச்சேரி மாநிலத்தில் தேசிய நெடுஞ்சாலை ஓரங்களில் இயங்கி வந்த 150க்கும் மேற்பட்ட மதுக்கடைகள் அதிரடியாக மூடப்பட்டு, கிராமப் பகுதிகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டன.உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து, மதுக்கடை உரிமையாளர்கள் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.மனுவை விசாரித்த நீதிபதிகள், 500 மீட்டர் துாரத்தை, 220 மீட்டராக குறைத்து உத்தரவிட்டனர்.
பின்னர், நகராட்சி பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் மதுக் கடைகள் நடத்திட தளர்வு அளித்து கடந்த 2018ம் ஆண்டு உத்தரவிட்டனர்.அதனையொட்டி, புதுச்சேரியில், உழவர்கரை நகராட்சிக்கு உட்பட்ட கனகசெட்டிக்குளம் முதல் இந்திரா சிலை சதுக்கம், வில்லியனுார் வரையிலான தேசிய நெடுஞ்சாலை, ராஜிவ் சதுக்கம் முதல் கோரிமேடு வரையிலான நெடுஞ்சாலையில் மீண்டும் மதுக்கடைகள் இயங்கி வருகின்றன.
அதேபோல, புதுச்சேரி நகராட்சிக்கு உட்பட்ட இந்திரா சிலை சதுக்கம் முதல் அரியாங்குப்பம் வரையிலான தேசிய நெடுஞ்சாலையிலும் மீண்டும் மதுக்கடைகள் திறக்கப்பட்டன.ஆனால், வில்லியனுார் - மதகடிப்பட்டு வரையிலான விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலை, அரியாங்குப்பம் - முள்ளோடை வரையிலான கடலுார் தேசிய நெடுஞ்சாலையில் இயங்கி வந்த 50க்கும் மேற்பட்ட மதுக்கடைகள் மட்டும், தொடர்ந்து கிராமப் பகுதிகளில் இயங்கி வந்தன
இந்நிலையில், தமிழக அரசு சார்பில், கடந்த 2018ம் ஆண்டு உச்சநீதிமன்றம் அளித்த தளர்வு குறித்து தெளிவுபடுத்த வேண்டி மனு தாக்கல் செய்யப்பட்டது.மனுவை விசாரித்த நீதிபதிகள், மக்கள் தொகை 20 ஆயிரத்திற்கு உட்பட்ட மற்றும் நகராட்சிக்கு இணையாக அனைத்து வகையிலும் வளர்ச்சி பெற்ற பகுதிகளில் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் மதுக்கடைகளை திறப்பது குறித்து அந்தந்த மாநில அரசுகளே முடிவு செய்து கொள்ள அனுமதி வழங்கினர்.
அதன்படி, 20 ஆயிரம் மக்கள் தொகைக்கு உட்பட்டுள்ள, நகராட்சி பகுதிக்கு இணையாக வளர்ச்சி பெற்ற அரியாங்குப்பம் முதல் முள்ளோடை வரையிலான கடலுார் தேசிய நெடுஞ்சாலையில், மதுக்கடைகள் செயல்பட கடந்த 2020, பிப்.12ம் தேதி அனுமதி வழங்கி, புதுச்சேரி அரசு உத்தரவிட்டது.அதேபோல, வில்லியனுார் முதல் மதகடிப்பட்டு வரையிலான விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில், மதுக்கடைகள் செயல்பட அனுமதி வழங்கியது.இருப்பினும், கொரோனா தொற்று பரவல், சட்டசபை தேர்தல் காரணமாக இந்த உத்தரவை செயல்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டது.
கொரோனா இரண்டாம் அலை ஓய்ந்ததை தொடர்ந்து, கடந்தாண்டு இறுதியில் இருந்து அரியாங்குப்பம் - முள்ளோடை மற்றும் வில்லியனுார் - மதகடிப்பட்டு வரையிலான தேசிய நெடுஞ்சாலைகளில் மீண்டும் மதுபான கடைகள் செயல்பட துவங்கியுள்ளன.அதன்படி, தவளக்குப்பம், கிருமாம்பாக்கம், கன்னியகோவில், முள்ளோடை, மங்கலம், அரியூர், திருவண்டார்கோவில், திருபுவனை, மதகடிப்பட்டு ஆகிய பகுதிகளில் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி மதுக்கடைகள் செயல்பட்டு வருகின்றன.
இதனால், கடந்த நான்கு ஆண்டுகளாக வெறிச்சோடி கிடந்த அரியாங்குப்பம் - முள்ளோடை; வில்லியனுார் - மதகடிப்பட்டு தேசிய நெடுஞ்சாலைகள் தமிழக பகுதி 'குடிமகன்'களின் படையெடுப்பால் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பியுள்ளது.