கூடலுார்:முதுமலை, தெப்பக்காடு பகுதியில், மாயார் ஆற்றின் குறுக்கே புதிய பாலம் கட்டும் பணி துவக்கப்பட்டதால், வாகனகள் செல்ல, வனத்துறை சாலையை பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.முதுமலை, தெப்பக்காடு மசினகுடி சாலையில், மாயார் ஆற்றின் குறுக்கே ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட, 100 ஆண்டுகள் பழமையான பாலம் உள்ளது. சேதமடைந்து வரும் பாலத்தில், 'ஆறு டன் எடையுள்ள வாகனங்கள் மட்டும் செல்ல வேண்டும்' என, அறிப்பு பலகை வைக்கப்பட்டது.தற்போது, பழைய பாலத்தை இடித்து விட்டு, புதிய பாலம் கட்டுவதற்காக, 1.85 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. வனத்துறை அனுமதி கிடைத்ததை தொடர்ந்து, புதிய பாலம் கட்டுவதற்கான பணிகள் துவக்கப்பட்டன. பணியின் போது, தெப்பக்காடு-மசினகுடி இடையே, வனத்துறைக்கு சொந்தமான சாலையில் தற்காலிகமாக வாகனங்களை இயக்க வனத்துறை அனுமதி வழங்கி உள்ளது. இதற்கான, நெடுஞ்சாலை துறை மூலம் நிதி ஒதுக்கப்பட்டு, சாலை, தற்காலிகமாக சீரமைக்கப்பட்டது.வனத்துறையினர் கூறுகையில்,'பாலம் பணி துவக்கப்பட்டுள்ளது. இப்பணி முடியும் வரை, வனத்துறை கண்காணிப்பின் கீழ், இச்சாலையில், தற்காலிகமாக வாகனங்கள் இயக்க அனுமதிக்கபடும்,' என்றனர்.