திருப்பூர்:''மாணவி தற்கொலை விவகாரத்தில், தி.மு.க., அரசு அரசியல் செய்து வருகிறது,'' என்று ஹிந்து மக்கள் கட்சி நிறுவனர் அர்ஜுன் சம்பத் குற்றம்சாட்டினார்.
ஹிந்து மக்கள் கட்சி சார்பில், அரியலுார் மாணவிக்கு, புஷ்பாஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி திருப்பூர், ராயபுரத்தில் நேற்று நடந்தது.பின், அர்ஜுன் சம்பத் நிருபர்களிடம் கூறியதாவது:மாணவியை கல்வி நிறுவனத்தினர் மதமாற்றம் செய்ய, ஆசை வார்த்தை காட்டி உள்ளனர்.
கழிப்பிடத்தை சுத்தம் செய்ய, மாணவியை வற்புறுத்தினர். மனமுடைந்த அவர் தற்கொலை செய்தார்.இன்றைக்கு நாட்டில் மதமாற்றம் அதிகமாகி விட்டது. அரசியல் கட்சியினர் ஓட்டு வங்கிக்காக, அவர்களை ஆதரித்து வருகின்றனர்.மாணவி தற்கொலை விவகாரத்தில், தி.மு.க., அரசும், போலீஸ் துறையும் அரசியல் செய்கின்றன. மாணவி குடும்பத்துக்கு, 50 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். அரசு சார்பில், வீடு வழங்க வேண்டும்.
மதமாற்ற தடை சட்டத்தை கொண்டு வர வேண்டும்.தமிழர்களின் கலாசாரம், பண்பாட்டை கொச்சைப்படுத்தும் வகையில், யூடியூப் சேனலில் வீடியோ வெளியிட்டு வருகின்றனர். அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில், மும்மொழி கல்வி திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.