ஊட்டி:கோடைகால மின் தேவையை பூர்த்தி செய்ய, நீலகிரி மாவட்ட மின் நிலையங்களில், 300 மெகாவாட் மின் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.நீலகிரி மாவட்டத்தில் குந்தா, பைக்காரா நீர்மின் திட்டத்தில் 12 மின் நிலையங்கள், 13 அணைகள் உள்ளன. இவற்றில், தினமும், 833.65 மெகாவாட் மின் உற்பத்தி மேற்கொள்ள முடியும். தற்போதைய மின் உற்பத்தி, 350 மெகாவாட் ஆக உள்ளது.நீலகிரி மாவட்டத்தின் பயன்பாட்டுக்கு, 70 மெகாவாட் தேவையை பூர்த்தி செய்த பின், கோவை, ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட வெளிமாவட்டங்களுக்கு வினியோகிக்கப்படுகிறது.அடுத்தமாதம் கோடைகாலம் துவங்க உள்ள நிலையில், வெளி மாவட்டதொழில் நிறுவனங்களுக்கு கூடுதல் மின்சாரம் தேவைப்படும் என்பதால், மின் நிலையங்களில் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட்டது. வரும் நாட்களில், காலை, மாலை நேரங்களில், உச்ச மின் தேவையை அதிகரிக்க, குந்தா அணையில் 85 அடி வரை தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளது. இதேபோல, கெத்தை உள்ளிட்ட அணைகளில் தண்ணீர் முழு கொள்ளளவில் தேக்கி வைக்கப்பட்டுள்ளது.மின்வாரிய அதிகாரிகள் கூறுகையில்,'அணைகளில், 70 சதவீத அளவுக்கு தண்ணீர் இருப்பில் உள்ளது. கோடை கால மின் தேவையை பூர்த்தி செய்ய இன்னும், 300 மெகாவாட் மின் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது' என்றனர்.