அவிநாசி:அவிநாசி அருகே சோளத்தோட்டத்தில் பதுங்கிய சிறுத்தை, இரண்டாவது நாளாக முயன்றும், வனத்துறையினர் பிடியில் சிக்கவில்லை.திருப்பூர் மாவட்டம், அவிநாசி அருகே பாப்பாங்குளம் ஊரடி தோட்டத்தில் பதுங்கியிருந்த சிறுத்தை நேற்று முன்தினம் சோளத்தட்டு பறிக்க சென்ற வரதராஜன், 60, மாறன், 66 ஆகியோரை தாக்கி காயப்படுத்தியது.
மாலையில், கண்காணிப்பு பணியில் ஈடுபட்ட வன ஊழியர் மணிகண்டனை தாக்கியது.சிறுத்தையை கண்காணிக்க வனத்துறையினர், 12 இடங்களில் கேமராக்கள் பொருத்தினர். மூன்று இடங்களில் கூண்டு வைத்து, இறைச்சி வைக்கப்பட்டது. சில இடங்களில் வலை வைக்கப்பட்டது. 'ட்ரோன்'கள் வாயிலாக சிறுத்தை நடமாட்டம் கண்காணிக்கப்பட்டது.
கோவை மண்டல வன பாதுகாப்பு அலுவலர் ராமசுப்ரமணியம் மேற்பார்வையில், சிறுத்தையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கும் பணி நடந்தது. காலை, 10:17 மணிக்கு 'கிரேன்' வாகனத்தில், கால்நடை மருத்துவர் சுகுமாரன் உள்ளிட்ட நான்கு பேர், மயக்க ஊசியுடன் சிறுத்தை பதுங்கியிருந்த தோட்டத்தில் தேடினர். தற்காப்பு உடையணித்த வன ஊழியர்களும், தோட்டம் முழுக்க தேடினர்.
இந்நிலையில், ஒரு கி.மீ., தொலைவில் உள்ள பஞ்சலிங்கம்பாளையம் பகுதியில் உள்ள தோட்டத்தில் சிறுத்தையை பார்த்ததாக சிலர் கூறினர். இதையடுத்து, வனத்துறை உள்ளிட்ட அனைவரும் அங்கு விரைந்தனர். அந்த தகவல் வதந்தி என தெரிந்ததும் திரும்பி வந்தனர்.மாவட்ட வன அலுவலர் தேஜஸ்வி கூறுகையில், ''வனத்துறையினர் நான்கு குழுக்களாக பிரிக்கப்பட்டு, கிராமத்தின், 4 கி.மீ., சுற்றளவுக்கு கண்காணிப்பில் ஈடுபட உள்ளனர். சிறுத்தை நடமாட்டம் குறித்து தெரிந்தால், தெரிவிக்க வேண்டும் என கிராம மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது,'' என்றார்.