கோவை: பருத்தி நுால் விலை அபரிமிதமாக உயர்ந்து வருவதால், ஏற்கனவே செய்து கொண்ட 'ஆர்டர்'களை முடித்துக் கொடுக்க முடியாமல் நுாற்பாலைகள் தத்தளிக்கின்றன.
நம் நாட்டில் பருத்தி, பஞ்சு மற்றும் நுால் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஒரு கேண்டி (356 கிலோ) பஞ்சு கொள்முதல் விலை, 78 ஆயிரம் முதல், 80 ஆயிரம் ரூபாய் வரை விற்கப்படுகிறது. பஞ்சு விலை அடிப்படையாகக் கொண்டு நுால் விலையும் உயர்த்தப்படுகின்றன.
மூலப் பொருட்கள் விலை அபரிமிதமாக உயர்வதை பார்த்து, ஜவுளி உற்பத்தியாளர்கள் மிரட்சியில் இருக்கின்றனர்.கோவையில் உள்ள நுாற்பாலை நிறுவனத்தினர், வெளிநாடுகளில் ஆர்டர் பெற்று, நம்பிக்கையின் பேரில் ஜவுளி ரகங்களை உற்பத்தி செய்து கொடுக்கின்றனர். நுால் விலை உயர்ந்திருந்தாலும், ஏற்கனவே எடுத்த ஆர்டர்களுக்கு, ஜவுளி ரகங்களை உற்பத்தி செய்து கொடுக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
ஒப்பந்தந்தில் குறிப்பிட்டுள்ள விலைக்கே இன்று வரை கொடுத்து வருகின்றனர். விலையை உயர்த்த முடியாத சூழ்நிலையால், பெருத்த நஷ்டத்தில் தொடர்ந்து துணி ரகங்களை உற்பத்தி செய்து கொடுக்கின்றனர்.
இத்தகைய சூழலில், விலை உயர்வு மற்றும் தட்டுப்பாடு காரணமாக நுால் வந்து சேர்வதில் இடைவெளி ஏற்பட்டுள்ளது. துணி ரகங்கள் உற்பத்தி செய்வதிலும் காலதாமதம் ஏற்படுகிறது. காலதாமதத்தை ஆர்டர் கொடுத்த நிறுவனங்கள் ஏற்றுக்கொள்வதில்லை. இருப்பினும் தற்போது நிலவும் சூழலை குறிப்பிட்டு ஏற்றுக்கொள்ள வைக்கின்றனர் ஜவுளி உற்பத்தியாளர்கள்.
இதே நிலை தொடரும் பட்சத்தில், கோவை மற்றும் திருப்பூர், ஈரோடு மாவட்டங்களுக்கு வந்து சேர வேண்டிய ஆர்டர்கள், போட்டி நாடுகளான வங்கதேசம், சீனா, வியட்நாம், மியான்மருக்கு சென்று விடும்.
தென்னிந்திய நுாற்பாலைகள் சங்க (சிஸ்பா) தலைவர் செல்வனிடம் கேட்டபோது, ''வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் பருத்திக்கு, 11 சதவீத வரியை நீக்க வேண்டும். வெளிநாடுகளுக்கு பஞ்சு ஏற்றுமதி தடை செய்ய வேண்டும். ஜவுளித்துறை சார்ந்த நிறுவனங்களுக்கு மட்டுமே இந்திய பருத்தி கழகம் பஞ்சு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை, மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். மத்திய அரசு நிச்சயம் கவனத்தை எங்கள் மீது திருப்பும் என்கிற நம்பிக்கையுடன் காத்திருக்கிறோம்,'' என்றார்.