சென்னை : கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குடியரசு தின விழாவில், நெருக்கடி காலத்தில் சிறப்பாக பணியாற்றிய பல்துறையினருக்கு பாராட்டு சான்றுகள் வழங்கப்பட்டன.சென்னை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குடியரசு தின விழாவில், கலெக்டர் விஜயராணி, தேசிய கொடி ஏற்றி, போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார்.விழாவில், 48 பயனாளிகளுக்கு உதவித்தொகை, தையல் இயந்திரம், இருசக்கர வாகனங்கள் என, 8.90 லட்ச ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.தொடர்ந்து, மருத்துவ துறையில் சிறப்பாக பணியாற்றிய, கிண்டி கிங்ஸ் அரசு கொரோனா மருத்துவனையின் இயக்குனர் நாராயணசாமி, ஸ்டான்லி மருத்துவமனை டீன் பாலாஜி, ராஜிவ் காந்தி மருத்துவமனை டீன் தேரணி ராஜன், ஓமந்துாரார் மருத்துவமனை டீன் ஜெயந்தி உள்ளிட்டோருக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.அதேபோல், சிறந்த சமூக சேவகராக ஹரிகிருஷ்ணன், தொழிலாளர் துறையில் உதவி கமிஷனர் சாந்தி, ரெட்கிராஸ் அமைப்பினர், வருவாய்த்துறை அலுவலர்கள், ஊழியர்கள் என, பல்வேறு துறைகளை சார்ந்த அலுவலர்கள் கவுரவிக்கப்பட்டனர்.தொடர்ந்து மாதவரம், எழும்பூர், பெரம்பூர் மற்றும் திருவொற்றியூர் தாசில்தார்களுக்கும் சான்றுகள் வழங்கப்பட்டன. கொரோனா பரவலால், இந்த ஆண்டு மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டது.