ஆர்.எஸ்.மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலம் வட்டாரத்தில் தற்போது நெல் அறுவடை பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளன. அறுவடை செய்த வயல்களில், கோடை சாகுபடியாக பயறு வகைகள் சாகுபடி செய்ய வேளாண்மை துறை அதிகாரிகள் விவசாயிகளை வலியுறுத்தி உள்ளனர்.
இதுகுறித்து ஆர்.எஸ்.மங்கலம் வேளாண்மை உதவி இயக்குனர் ராஜலட்சுமி கூறுகையில், அறுவடை செய்யப்பட்ட நெல் வயல்களில் உளுந்து, பச்சைப்பயறு உள்ளிட்ட பயறு வகைகள் சாகுபடி செய்வதன் மூலம், 70 முதல் 80 நாட்களுக்குள், குறைந்த செலவில், ஏக்கருக்கு 10,000 முதல் 12,000 வரை விவசாயிகளுக்கு வருமானம் கிடைக்கும்.
பயறுவகை பயிர்களில் வேர் முடிச்சுகளில் உள்ள ரைசோபியம் பாக்டீரியா, வளி மண்டலத்தில் உள்ள தழை சத்தை மண்ணில் நிலை நிறுத்துகிறது. இதனால் மண் வளம் மேம்படுகிறது. மேலும் வயல்களில், பருத்தி, எள் சாகுபடி பயிர்களுக்கு இடையில், உளுந்து, பாசிப்பயறு, தட்டைப்பயிறு உள்ளிட்ட பயிர்களை ஊடுபயிராக பயிர் செய்வதால், விவசாயிகளுக்கு வருவாய் கிடைப்பதுடன், பருத்தியில் பூச்சி நோய் தாக்குதல் குறைகிறது. ஆர்.எஸ்.மங்கலம் வட்டாரத்தில் கண்மாய்,குளங்களில் உள்ள தண்ணீரை பயன்படுத்தி, 1400 எக்டேர் பயறு வகை பயிர்கள் பயிர் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் பயிறு வகை சாகுபடி செய்து பயன்பெறலாம். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.