வேளச்சேரி : வேளச்சேரியில், பழைய கட்டடம் இடிக்கும்போது, இடிபாடுகள் பக்கத்து வீட்டில் விழுந்ததில், இரண்டு பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இது தொடர்பாக, போலீசார் விசாரிக்கின்றனர்.வேளச்சேரி காவல் நிலையம் அருகில், ஆறு மாடியில் தனியார் நிறுவனம் உள்ளது. இதன் கட்டடம் மிகவும் பழுதடைந்து இருந்ததால், புதிய கட்டடம் கட்டப்பட உள்ளது.இதற்காக, பழைய கட்டடம் இடிக்கும் பணி, இரவு, பகலாக நடக்கிறது. பழைய கட்டடத்தை இடிக்கும்போது, பக்கத்தில் உள்ள கட்டடங்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், பாதுகாப்பு வளையம் அமைக்க வேண்டும்.இரவில், அதிக சத்தம் எழுப்பும் இயந்திரம் பயன்படுத்தக்கூடாது, கட்டட கழிவுகளை பாதுகாப்புடன் அகற்ற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் மாநகராட்சி விதித்துள்ளது.இதை மீறி, கட்டடம் இடிக்கும் பணி நடந்தது. இது குறித்த புகாரை அடுத்து, மாநகராட்சி அதிகாரிகள் இருதினங்களுக்கு முன், கட்டடம் இடிக்கும் நிறுவனத்தை எச்சரித்தனர்.இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, கட்டடம் இடிக்கும் பணியின்போது ஒரு பகுதி, அருகே வசிக்கும், தினேஷ் என்பவரது வீட்டில் விழுந்தது.இதில், வீட்டின் சுற்றுச்சுவர் இடிந்தது. சுவர் அருகே நின்ற மூர்த்தி, 40, மற்றும் அவரது தாய் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இது தொடர்பாக, தினேஷ் வேளச்சேரி போலீசில் புகார் அளித்தார்.போலீசார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள், கட்டடம் இடிக்கும் பணியை நிறுத்தி, தொடர்ந்து விசாரிக்கின்றனர்.