சென்னை : சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்தியன் ஆயில் நிறுவனத்தின் தென் மண்டல தலைமை அலுவலகத்தில் நேற்று, குடியரசு தினம் கொண்டாடப்பட்டது. அதில் செயல் இயக்குனர் சைலேந்திரா தேசிய கொடியை ஏற்றினார்.பின், அவர் பேசியதாவது:வரும் 2030க்குள் சூரியசக்தி உள்ளிட்ட புதுப்பிக்கத்தக்க மின்சாரத்தை பொறுத்தவரை 500 ஜிகா வாட் என்ற இலக்கை மத்திய அரசு நிர்ணயித்துள்ளது. இதற்கு உறுதுணையாக இருக்க, இந்தியன் ஆயில் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் ஆதார அளவை அதிகரித்து வருகிறது.நாட்டில் எலக்ட்ரிக் வாகனங்களை சார்ஜ் செய்யும், 10 ஆயிரம் சார்ஜிங் மையங்கள் அமைக்க இருப்பதாக அரசு அறிவித்துள்ளது.அதில் 5,000 சார்ஜிங் மையங்களை, இந்தியன் ஆயில், தமிழகம் உட்பட நாடு முழுதும் அமைக்கும். துாய்மையான மற்றும் நம்பிக்கையான ஆற்றல் ஆதார வளமாக ஹைட்ரஜன் உள்ளது. ஹைட்ரஜன் அடிப்படையிலான போக்குவரத்து தீர்வுகளை நோக்கி, நாட்டை நகர்த்துவதற்கான முயற்சிகளில் ஐ.ஓ.சி., ஈடுபட்டுள்ளது.இவ்வாறு அவர் பேசினார்.