அடையாறு : 'நமக்கு நாமே' திட்ட பணிகளுக்கு, மாநகராட்சி தயாரிக்கும் மதிப்பீடு தொகைக்கும், நலச்சங்கங்கள் தயாரிக்கும் மதிப்பீட்டு தொகைக்கும் பல மடங்கு வித்தியாசம் இருப்பதால், இத்திட்டத்தை செயல்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டள்ளது. சென்னையில், பூங்கா, வகுப்பறை, சாலை மேம்பாடு, தெருவிளக்கு போன்ற பணிகளை, மக்கள் பங்களிப்புடன் செய்ய, 'நமக்கு நாமே' திட்டத்தை, தமிழக அரசு அறிமுகம் செய்தது.இதன்படி, பணிக்கான தொகையில், மூன்றில் ஒரு பங்கு அல்லது பாதிக்கு மேல் அல்லது முழு தொகை என, பொதுமக்கள் பங்களிப்பு இருக்க வேண்டும்.அடையாறு மண்டலத்தில், பூங்கா, பள்ளி, சாலை சீரமைப்புக்கு, நலச்சங்கங்கள், பொதுமக்கள் நிதி வழங்கி உள்ளனர். குளம், சாலையோர பூங்கா உள்ளிட்ட மேம்பாட்டு பணிகள் செய்ய நலச்சங்கங்கள் முன்வந்துஉள்ளன.ஆனால், மாநகராட்சி பொறியாளர்கள் தயாரிக்கும் மதிப்பீட்டில் குளறுபடி ஏற்பட்டுள்ளதால், பொதுமக்கள் நிதி வழங்க தயங்குகின்றனர். இதனால், நமக்கு நாமே திட்டத்தை செயல்படுத்துவதில், சிக்கல் ஏற்பட்டுள்ளது.இது குறித்து, நலச்சங்க நிர்வாகிகள் கூறியதாவது: மூன்றில் ஒரு பங்கு, பாதிக்கு மேல் என்ற கணக்கீட்டில் நிதி வழங்க தயாராக உள்ளோம். மாநகராட்சி, மதிப்பீடு செய்யும் திட்டப்பணியை நாங்கள், ஓய்வு பெற்ற பொறியாளர்களை கொண்டு மீண்டும் மதிப்பீடு செய்கிறோம்.மாநகராட்சி தயாரித்த மதிப்பீடுக்கும், எங்கள் மதிப்பீடுக்கும் பல மடங்கு வித்தியாசம் உள்ளது. நமக்கு நாமே திட்ட பணிகள், கமிஷன் இல்லாமல் நடக்க வேண்டும் என விரும்புகிறோம். அதற்கு ஏற்ப, மாநகராட்சி அதிகாரிகள் மதிப்பீடு தயாரிக்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.