ஆத்தூர் : ஆத்துார் அரசு மருத்துவமனையில் வளங்குன்றா சுற்றுச்சூழல் கல்வி, அச்சாணி அமைப்புகள் மூலம் காசநோயாளிகளுக்கு நலத்திட்டம் வழங்கப்பட்டது.திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லுாரி காசநோய் பிரிவு துணை இயக்குனர் ராமச்சந்திரன் தலைமை வகித்தார்.
முதன்மை மருத்துவ அலுவலர் லியோன் வினோத்குமார் முன்னிலை வகித்தார். ஆத்துார் அரசு மருத்துவமனை நம்பிக்கை மைய ஆற்றுனர் கண்ணன் வரவேற்றார். துணை இயக்குனர் ராமச்சந்திரன் பேசுகையில்,''இந்தியாவில் 2025 க்குள் காச நோயை ஒழிக்கும் திட்டத்தில் பல்வேறு மருத்துவ வசதிகள், நடமாடும் பரிசோதனை மையங்கள், சமூக நல நிதி உதவிகளை வழங்குகிறது. தொண்டு நிறுவனங்கள் மூலமும் இதற்கான பணிகள் மும்முரமாக நடக்கிறது.
ஒரு காசநோய் தொற்றாளர் 15 நபர்களுக்கு தொற்று பரப்பும் சூழல் உள்ளது. தொடர் சிகிச்சை, ஊட்டச்சத்து உணவுகள் மூலம் பரவல் வேகத்தை கட்டுப்படுத்தலாம், என்றார். தொண்டு அமைப்புகளின் ஒருங்கிணைப்பாளர்கள் அழகர்சாமி, கருப்பையா, ராமர், காசநோய் பிரிவு சுகாதார பணியாளர் மரிய மெரினா பங்கேற்றனர்.