புதுச்சேரி:கவர்னர் தமிழிசை, தெலுங்கானா மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் நேற்று தேசியக் கொடியேற்றி, போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.
குடியரசு தின விழாவில், கவர்னர் தேசியக் கொடி ஏற்றுவது மரபு. ஆனால், புதுச்சேரிக்கு தனி கவர்னர் நியமிக்கப்படவில்லை. தெலுங்கானா கவர்னர் தமிழிசை, கூடுதல் பொறுப்பாக கவனித்து வருகிறார்.கடந்த 2015ம் ஆண்டு, அந்தமான் கவர்னர் அஜய்குமார் சிங், கூடுதல் பொறுப்பாக, புதுச்சேரி கவர்னர் பதவியை கவனித்தார்.
அப்போது, அந்தமானில் நடந்த குடியரசு தின விழாவில் அஜய்குமார் சிங் பங்கேற்றதால், அப்போதைய முதல்வர் ரங்கசாமி, தேசியக் கொடியேற்றினார்.அதுபோன்ற சூழ்நிலை இந்தாண்டு ஏற்பட்டது. ஆனால், இரு மாநில கவர்னர் பதவியை வகிக்கும் தமிழிசை, தெலுங்கானா மற்றும் புதுச்சேரியில் நடந்த குடியரசு தின விழாக்களில் பங்கேற்றார்.
நேற்று காலை 7:௦௦ மணிக்கு தெலுங்கானா தலைநகர் ஐதராபாதில் நடந்த குடியரசு தின விழாவில் தேசியக் கொடியேற்றிய கவர்னர் தமிழிசை, 7:35 மணிக்கு தனி விமானத்தில் புறப்பட்டார்.புதுச்சேரி விமான நிலையத்தை 8:50 மணிக்கு வந்தடைந்தார். அங்கிருந்து, கார் மூலம் ராஜ்நிவாஸ் வந்து சேர்ந்தார். காலை 9:09 மணிக்கு கடற்கரை சாலைக்கு வந்து தேசியக் கொடியேற்றினார்.
இதன் மூலம், குடியரசு தினத்தில் இரு மாநிலங்களில் தேசியக் கொடி ஏற்றிய, புதுச்சேரி மாநிலத்தின் முதல் கவர்னர் என்ற பெருமையை பெற்றார்.