குடியரசு தின விழாவை முன்னிட்டு, 36 பயனாளிகளுக்கு, 4.91 கோடி ரூபாய் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
திருவள்ளூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில், 73-வது குடியரசு தின விழா நடந்தது. கலெக்டர் அல்பி ஜான் வர்கீஸ் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தி, காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.பின், மூவர்ண பலுான் மற்றும் சமாதான புறாக்களை பறக்க விட்டார்.அரசின் பல்வேறு துறைகளின் சார்பாக சிறப்பாக பணியாற்றிய அரசு துறை அலுவலர்கள், காவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு கேடயம், பாராட்டுச்சான்றிதழ் வழங்கினார்.
மாவட்ட தொழில் மையம் சார்பாக, எட்டு பயனாளிகளுக்கு 4.65 கோடி ரூபாய் மதிப்பில், தொழில் துவங்குவதற்கான கடனுதவி; பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகம் சார்பாக ஐந்து பேருக்கு, 24 ஆயிரத்து, 355 ரூபாய் மதிப்பில், விலையில்லா சலவை பெட்டி.ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பாக ஐந்து பயனாளிகளுக்கு, 75 ஆயிரம் ரூபாய் மதிப்பில், மீன்பிடி வலை; முன்னாள் படைவீரர்கள் நலத்துறை சார்பாக, இருவருக்கு, 50 ஆயிரம் மானியம்.குறைந்த வட்டிவேளாண் மற்றும் உழவர் நலத்துறை சார்பாக நான்கு பேருக்கு 10 ஆயிரத்து 346 ரூபாய் மதிப்பில், விசைத் தெளிப்பான் கருவி, பச்சைப் பயிறு விதைகளும், மரக்கன்று; தோட்டக்கலைத் துறை சார்பாக, மூவருக்கு, 5.25 லட்சம் ரூபாய் மதிப்பில், காளான் வளர்ப்புக் குடில், நிரந்தர பந்தல் அமைப்பு.வேளாண் பொறியியல் துறை சார்பாக, இருவருக்கு, 3.35 லட்சம் ரூபாய் மதிப்பில், டிராக்டர் மற்றும் பவர் டிரில்லர்; மீன் வளத்துறை சார்பாக, இருவருக்கு, 2.40 லட்சம் ரூபாய் மதிப்பில், விவசாய கடன் அட்டை திட்டத்தின் கீழ் மீன்பிடி தொழிலுக்கு குறைந்த வட்டி வீதத்தில் வங்கி கடன். மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக, இருவருக்கு 1 லட்சத்து, 740 ரூபாய் மதிப்பில் பெட்ரோல் வாகனம், கையடக்க கணினி.தாட்கோ சார்பாக, மூவருக்கு, 12 லட்சத்து 44 ஆயிரத்து, 497 ரூபாய் மதிப்பில், ஆட்டோ மற்றும் லோடு வாகனம் என மொத்தம், 36 பயனாளிகளுக்கு, 4.91 கோடி ரூபாய் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவியினை, கலெக்டர் வழங்கினார்.
நிகழ்ச்சியில், எஸ்.பி., வருண்குமார், டி.ஆர்.ஓ., பொறுப்பு குணசேகரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் ஜெயகுமார் உட்பட பலர் பங்கேற்றனர்.
அரசு அலுவலகம்
திருவள்ளூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், மாவட்ட முதன்மை நீதிபதி செல்வசுந்தரி, திருவள்ளூர் நகராட்சியில், ஆணையர் ரவிச்சந்திரன், டி.எஸ்.பி., அலுவலகத்தில், டி.எஸ்.பி., சந்திரதாசன் உள்ளிட்டோர், தேசிய கொடி ஏற்றி வைத்து, மரியாதை செலுத்தினர்.
துாய்மை பணியாளர்கள்
திருவள்ளூர் நகராட்சியில், பணிபுரியும் 250 துாய்மை பணியாளர்களுக்கு, திருவள்ளூர் ரோட்டரி கிளப் ஆப் ராயல்ஸ் மற்றும் நகராட்சி மூலம், இனிப்புடன், மதிய உணவு வழங்கப்பட்டது.ஆணையர் ரவிச்சந்திரன், சுகாதார அலுவலர் கோவிந்தராஜ், ரோட்டரி கிளப் ஆப் ராயல்ஸ் தலைவர் மருத்துவர் அபர்ணா பங்கேற்றனர்.
* திருத்தணி கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஆர்.டி.ஓ.,சத்யா; தாசில்தார் அலுவலகத்தில் தாசில்தார் ஜெயராணி; ஒன்றிய அலுவலகத்தில் சேர்மன் தங்கதனம்; சுதந்திர பள்ளியில் தாளாளர் சியமளா ரங்கநாதன்; தளபதி பள்ளியில் தாளாளர் பாலாஜி ஆகியோர் தேசிய கொடி ஏற்றி வைத்து இனிப்பு வழங்கினார்
* கடம்பத்துார் ஒன்றியம், உளுந்தை ஊராட்சி ஒன்றிய அரசு உயர்நிலைப் பள்ளியில், ஊராட்சி மன்ற தலைவர் ரமேஷ், தேசிய கொடி ஏற்றி வைத்தார். பள்ளி தலைமை ஆசிரியர் சாந்தி உட்பட பலர் கலந்துக் கொண்டனர். கொரோனா தொற்றால் மாணவர்கள் பங்கேற்கவில்லை
* கும்மிடிப்பூண்டி பி.டி.ஓ., அலுவலகத்தில், சேர்மன் சிவகுமார், பேரூராட்சி அலுவலகத்தில் செயல் அலுவலர் யமுனா, டி.எஸ்.பி.,முகாம் அலுவலகத்தில் இன்ஸ்பெக்டர் பாலசுப்ரமணி, தீயணைப்பு நிலையத்தில் நிலைய அலுவலர் மாரியப்பன். ரயில்வே பாதுகாப்பு படை நிலையத்தில் இன்ஸ்பெக்டர் சந்தீப்பராசார் ஆகியோர் தேசிய கொடி ஏற்றி இனிப்புகள் வழங்கினார்
* பொன்னேரி நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு, முதல் ஆணையராக பதவியேற்ற தனலட்சுமி, குடியரசு தினத்தில், தேசிய கொடி ஏற்றி வைத்து, இனிப்பு வழங்கினார். பின், சிறப்பாக பணியாற்றிய, 10 ஊழியர்களுக்கு பாராட்டு சான்று பரிசுகள் வழங்கினார்.
சமூக இடைவெளி 'மிஸ்சிங்'
திருவள்ளூர் விளையாட்டு மைதானத்தில், நடந்த குடியரசு தின விழாவில், சிறப்பாக பணியாற்றி அரசு அலுவலர்களுக்கு, கேடயம், சான்றிதழை கலெக்டர் வழங்கினார்.அப்போது, விருது வாங்க வந்தவர்கள், அவர்களது உறவினர், ஊழியர்கள், கலெக்டர் மற்றும் அதிகாரிகளை சுற்றி, சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் நின்றனர்.
மேலும், பலர் முக கவசம் அணியாமல், கொரோனா தொற்று பயம் இல்லாமல், அலட்சியமாக இருந்தனர்.கொரோனா தொற்று காரணமாக, குடியரசு தின விழாவில், பொதுமக்கள், மாணவர்களுக்கு அனுமதி இல்லாத நிலையில், அதிகாரிகள், அலுவலர்களே, சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் இருந்ததால், விழாவிற்கு வந்திருந்தவர்கள், அதிருப்தி அடைந்தனர்.
- நமது நிருபர் குழு -