கும்மிடிப்பூண்டி:ஏ.என்.குப்பம் அணைக்கட்டில், தண்ணீர் பாயும் இடத்தில், ஆபத்தாக குளிக்கும் இளசுகளை கட்டுப்படுத்த வேண்டும் என, கிராம மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
கவரைப்பேட்டை அருகே, ஏ.என்.குப்பம் கிராமத்தில், ஆரணி ஆற்றின் குறுக்கே அணைக்கட்டு உள்ளது. கடந்த ஆண்டு மழை காலத்தில் இருந்து இப்போது வரை, அந்த அணைக்கட்டில் தண்ணீர் நிரம்பி வழிகிறது.நிரம்பி வழியும் அணைக்கட்டை காண ஏராளமான மக்கள் கூடுவது வழக்கம். அங்கு வருபவர்களில் சிலர், அணைக்கட்டின் ஓரம் உள்ள தண்ணீரில் குளித்து செல்வர்.
விபரீதம் உணராத இளசுகள் சிலர், அணைக்கட்டில் பாயும் தண்ணீர் அருகே ஆபத்தாக விளையாடிபடி குளித்து வருகின்றனர்.இதற்கு முன் அந்த அணைக்கட்டில் குளித்து கொண்டிருந்த போது, பலர் அடித்து சென்று உயிரிழந்துள்ளனர்.அதனால், எத்தனை முறை எச்சரித்தாலும் அங்கு வரும் இளசுகள் கேட்பது கிடையாது என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
அணைக்கட்டில் காவலாளியை நியமிக்க வேண்டும், குளிக்க தடை விதித்து எச்சரிக்கை பலகை வைக்க வேண்டும் என, கிராம மக்கள் எதிர்பார்க்கின்றனர்.