ஆர்.கே.பேட்டை:குக்கிராமங்களில் ஆசிரியர்கள் தங்கி, பாடம் நடத்த ஏதுவாக கட்டப்பட்ட குடியிருப்பு தற்போது பயன்பாட்டில் இல்லாத நிலையில், பாழடைந்து இருக்கிறது.
குக்கிராமங்களுக்கு போதிய போக்குவரத்து வசதி இல்லாத காலகட்டத்தில், ஆசிரியர்கள் அந்தந்த கிராமங்களிலேயே குடும்பத்துடன் தங்கி இருந்து பாடம் நடத்த ஏதுவாக, அவர்களுக்கு கடந்த நுாற்றாண்டில் குடியிருப்புகள் கட்டப்பட்டன.ஆர்.கே.பேட்டை ஒன்றியத்தில், விடியங்காடு மற்றும் இ.எம்.ஆர்.கண்டிகை கிராமங்களில் ஆசிரியர் குடியிருப்புகள் உள்ளன
இதில், இ.எம்.ஆர்.கண்டிகை அரசு தொடக்க பள்ளி அருகே கட்டப்பட்டுள்ள ஆசிரியர் குடியிருப்பு கட்டடம், பாழடைந்து இருக்கிறது. ஜன்னல்கள் பெயர்ந்து, கட்டடமும் வலுவிழந்து இருக்கிறது. இதனால், அந்த கட்டடத்தை கடந்து பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் அச்சத்தில் தவித்து வருகின்றனர்.
கடந்த நுாற்றாண்டில் இந்த குடியிருப்பில் வசித்து வந்த ஆசிரியர்கள், மாணவர்களுடன் பகிர்ந்து கொண்ட செயல்பாடுகள், கிராமத்தினரின் நினைவுகளில் இன்றும் பசுமையாக உள்ளது.தங்களின் ஆரம்ப கல்வியை நினைவுபடுத்தும் விதமாக அமைந்துள்ள இந்த ஆசிரியர் குடியிருப்பை, அவர்கள் குருகுலமாக மதிக்கின்றனர்.
கிராமத்தினரின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் விதமாக, இந்த கட்டடத்தை தொடர்ந்து சீரமைத்து பராமரிக்க வேண்டும் என்ற கோரிக்கைஎழுந்துள்ளது.விடியங்காடு அரசு தொடக்க பள்ளி அருகே உள்ள குடியிருப்பு கட்டடம், இன்று வரை நல்ல நிலையில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.