பழவேற்காடு:பழவேற்காடில் பஸ் நிலையம் இல்லாததால், பஜார் பகுதியில் போக்குவரத்து நெரிசலில் மக்கள் சிக்கி தவிக்கின்றனர்.
பழவேற்காடு பகுதிக்கு, பொன்னேரி, செங்குன்றம், கோயம்பேடு, மீஞ்சூர் ஆகிய பகுதிகளில் இருந்து, பஸ்கள் வந்து செல்கின்றன. தினமும், 50க்கும் மேற்பட்ட பஸ்கள், பழவேற்காடு பகுதிக்கு இயக்கப்படும் நிலையில், அவை நிற்பதற்கான நிலையம் அமைக்கப்படாமல் உள்ளது.ஒரே நேரத்தில், 5க்கும் மேற்பட்ட பஸ்கள், பழவேற்காடு பஜார் பகுதியில் குறுக்கும் நெடுக்குமாக நிறுத்தி வைக்கப்படுகின்றன.
இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன், அவ்வழியாக செல்லும் மற்ற வாகன ஓட்டிகளுக்கும், பொதுமக்களும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.பஸ் ஓட்டுனர்களுக்கும், மற்ற வாகன ஓட்டிகளுக்கும் வீண் வாக்குவாதங்களும் ஏற்படுகின்றன.
பழவேற்காடில் பஸ் நிலையம் அமைக்க வேண்டும் என, தொடர்ந்து மீனவ மக்கள் பல ஆண்டுகளாக வலியுறுத்தியும் நடவடிக்கை இன்றி இருக்கிறது.நிலையம் அமைப்பதற்கு தேவையான இட வசதிகள் உள்ள நிலையில், அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.