கும்மிடிப்பூண்டி:பன்பாக்கம் ஏரியில், கழிவு நீர் மற்றும் குப்பை கழிவுகள் குவிக்கப்படுவதால், ஏரி நீர் மாசடைவதுடன், அடுத்தடுத்துள்ள ஏரிகள் மற்றும் விளை நிலங்கள், நாசமாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
கவரைப்பேட்டை அருகே, பன்பாக்கம் கிராமத்திற்கு உட்பட்ட பன்பாக்கம் பெரிய ஏரி, 303.93 ஏக்கர் பரப்பு கொண்ட ஏரியாகும்.அந்த ஏரியில் உள்ள ஐந்து மதகுகள் வழியாக, சுற்றியுள்ள 478.09 ஏக்கர் பரப்பு விவசாய நிலங்களுக்கு, நீர்ப்பாசனம் செல்கிறது.அந்த ஏரியின் இரு கலங்கள் வழியாக, பன்பாக்கம் சித்தேரி, பரணம்பேடு, அண்டவாயல், ஏனாதிமேல்பாக்கம், கிளிக்கோடி, அரசூர் உள்ளிட்ட ஏரிகளுக்கு, உபரி நீர் செல்கிறது.
பரந்து விரிந்து காணப்படும் ஏரியின் ஒரு பகுதி, கவரைப்பேட்டையில் இருந்து, சத்தியவேடு நோக்கி செல்லும் சாலையோரம், வீட்டு வசதி வாரிய குடியிருப்பு அருகே அமைந்துள்ளது.அந்த இடத்தில், ஏரிக்கும் சாலைக்கும் தடுப்பு இல்லாததால், தொழிற்சாலை மற்றும் வீடுகளின் கழிவு நீர் மற்றும் குப்பை கழிவுகள் ஏரியில் குவிக்கப்பட்டு வருகின்றன.
இதனால், அடுத்தடுத்து உள்ள ஏரிகள் மற்றும் விளை நிலங்கள் நாசமாகும் நிலை ஏற்பட்டு உள்ளதாக, பன்பாக்கம் கிராம மக்கள் அச்சமடைந்து உள்ளனர். பொதுப்பணித் துறையினரும், போலீசாரும் ஒன்றிணைந்து பன்பாக்கம் ஏரியை பாதிப்பில் இருந்து மீட்டெடுக்க வேண்டும் என, மக்கள் எதிர்பார்க்கின்றனர்.