உத்திரமேரூர்:சாலவாக்கம் அருகே, 3,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட பெருங்கற்கால கல் வட்டங்கள் கண்டறியப்பட்டு உள்ளன.
உத்திரமேரூர் ஒன்றியம், சாலவாக்கம் ஊராட்சி குரும்பிறை கிராமத்தில் மலைக்குன்று உள்ளது.இங்கு, பழமையான கல் வட்டங்கள் இருப்பது குறித்து தகவலறிந்த உத்திரமேரூர் வரலாற்று ஆய்வு மைய தலைவர் கொற்றவைஆதன் தலைமையிலான குழுவினர், அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர்.அப்போது, அங்குள்ள மலைக்குன்றில், பெருங்கற்கால மனிதர்கள் இறந்தால், அவர்களை புதைக்கும் ஈமச்சின்னங்களான கல்வட்டங்களை கண்டறிந்தனர்.
உத்திரமேரூர் வரலாற்று ஆய்வு மையத் தலைவர் கொற்றவை ஆதன் கூறியதாவது: கல்வட்டங்கள் என்பவை, பெருங்கற்கால பண்பாட்டை சார்ந்தவை; இறந்தவர்களுக்கான நினைவுச் சின்னங்களில் ஒரு வகை.அக்காலத்தில் வாழ்ந்த மனிதர்கள் வேட்டையின் போதோ, வயது மூப்பின் காரணமாகவோ, நோய்வாய்ப்பட்டோ இறக்க நேரிட்டால், இறந்தவர்களின் உடலை புதைத்து, அவர் நினைவாகவும், அடையாளத்திற்காகவும், தரையின் மேற்பரப்பில் பெரிய, பெரிய பாறை கற்களை வட்டமாக நட்டு வைப்பர்.இதற்கு கல்வட்டம் என பெயர். இது அமைப்பதால், மற்றவர்களை இங்கு புதைப்பது தவிர்க்கப்படும்.
தற்போது அமைக்கப்படும் சமாதிகளுக்கு, இதுதான் துவக்கம்.மனிதர்களின் சுவடுகள் பெரும்பாலும் மலைகள் ஒட்டிய பகுதிகளிலும், மலைச்சரிவுகளிலுமே அதிகமாக காணப்படுகின்றன. இந்தக் குறும்பிறை மலைக்குன்றில் பத்துக்கும் மேற்பட்ட கல்வட்டங்கள் அடுத்தடுத்து காணப்படுகின்றன.அவை ஒவ்வொன்றும், 5 மீட்டர் நீளமும், 5 மீட்டர் அகலமும் கொண்டதாக உள்ளது.
இதன் அருகே உள்ள எடமச்சி கிராம சின்ன மலையிலும் ஐந்து கல்திட்டைகள் மற்றும் கல்வட்டங்களை கண்டறிந்தோம்.இப்பகுதி அனைத்தும், அக்காலத்தில் ஒரே பகுதியாக இருந்திருக்கலாம். பெருங்கற்காலத்தில்மனிதர்கள் இங்கு கூட்டமாக வாழ்ந்து இருக்க வாய்ப்புள்ளது. தற்போதும் இப்பகுதி சுடுகாடாகவும், இடுகாடாகவும் பயன்படுகிறது.இந்த கல்வட்டங்கள், 3,000 ஆண்டுகளுக்கு முற்பட்டதாக இருக்கலாம் என, வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். அப்போதே மக்கள் இங்கு வாழ்ந்துள்ளனர் என்பதற்கு அடையாளம்.
பழமையான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த கல்வட்டங்களில், முட்செடிகள் சூழப்பட்டும், சில சிதைந்து அழியும் தருவாயில் உள்ளன. தமிழகத் தொல்லியல் துறை உடனடியாக இந்த இடத்தை ஆய்வு செய்து, அவற்றை அடையாளப்படுத்தி, பாதுகாக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இதுகுறித்த தகவல்களை அனைவரும் அறியும் வண்ணம் அறிவிப்பு பலகை வைக்க வேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.