காஞ்சிபுரம்:குடியரசு தின விழாவையொட்டி, டாக்டர் கலாம் வழியில் உதவும் கரங்கள் அமைப்பினர், காஞ்சிபுரம் அல்லாபாத் ஏரிக்கரையில் நேற்று, 73 மரக்கன்று நடவு செய்தனர்.
காஞ்சிபுரத்தைச் சேர்ந்த டாக்டர் கலாம் வழியில் உதவும் கரங்கள் அமைப்பினர், ஆங்கிலம், தமிழ் புத்தாண்டு, குடியரசு, சுதந்திரம் தினம், பொங்கல், தீபாவளி பண்டிகை என, முக்கிய விசேஷ நாட்களில், ஏரி, குளக்கரை சாலையோரங்களில் மரக்கன்று நடும் விழா நடத்தி வருகின்றனர்.அதன்படி, குடியரசு தினமான நேற்று, சின்ன காஞ்சிபுரம் அல்லாபாத் ஏரிக்கரையில், மூங்கில், வேம்பு, ஆல், அரசு, புங்கன், பூவரசு, நெல்லி என, 73 மரக்கன்றுகளை நட்டனர்.
ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகள், செடிகளை மேயாமல் இருக்க கம்பி வலை அமைத்தனர். காஞ்சிபுரம் - வந்தவாசி சாலை, செங்கல்பட்டு சாலை, உத்திரமேரூர் சாலையோரங்களில், வேம்பு, புளி, நாவல், எலுமிச்சை, புங்கன் விதைகள் அடங்கிய, 150 விதைப்பந்துகளை துாவினர்.திருக்காலிமேடு மக்களுக்கு இனிப்பும், கபசுர குடிநீரும் வழங்கினர்.