காஞ்சிபுரம்:பேருந்து நிலையத்தில் பயணியரிடம் மொபைல் போன் திருடிய இருவரை, போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து, 10 மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
காஞ்சிபுரம் கவரை தெருவைச் சேர்ந்தவர் ஆறுமுகம், 45. தனியார் ஜவுளிக்கடையில் ஊழியர். நேற்று முன்தினம் மாலை, வேலை முடிந்து, சைக்கிளில் பேருந்து நிலையம் வந்தார். சைக்கிளில், பையில் அவருடைய மொபைல் போனை வைத்திருந்தார். தெரிந்தவருடன் பேசி கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத நபர், அந்த பையை எடுத்துச் சென்றார். இது குறித்து அவர், சிவகாஞ்சி போலீல் புகார் அளித்தார்.
போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில் பேருந்து நிலையத்தில் மக்காசோளம், முறுக்கு விற்பனை செய்யும் இருவர் மீது சந்தேகம் எழுந்தது. வெள்ளக்குளம் பகுதியைச் சேர்ந்த அன்னகொடி, 38, திருக்காலிமேடு வெங்கடேசன், 33, என இருவரையும் பிடித்து விசாரித்ததில், பயணியரிடம் மொபைல் பறிப்பில் ஈடுபட்டது உறுதியானது. அவர்களிடம் இருந்து, 10 மொபைல் போன் பறிமுதல் செய்யப்பட்டது. இருவரையும், போலீசார் கைது செய்தனர்.