மாமல்லபுரம்:மாமல்லபுரத்தில் அரைகுறையாக உள்ள கான்கிரீட் சாலையில், வாகன ஓட்டிகள் விபத்து அபாயத்துடன் கடக்கின்றனர்.
மாமல்லபுரத்தில், பொதுப்பணித்துறை சாலை இன்றியமையாதது. இவ்வூர் அண்ணாநகர் பகுதியினர், இவ்வழியே பிற பகுதிகள் சென்று திரும்புகின்றனர்; சுற்றுலா வாகனங்கள் செல்கின்றன.இச்சாலையில் ஏற்கனவே கான்கிரீட் சாலை அமைக்கப்பட்டுள்ளது. சில இடங்களில் பெயர்ந்து, சிறிய சேதங்கள் தவிர்த்து, தற்போதும் நன்றாக உள்ளது. பள்ளங்களை மட்டுமே சீரமைக்க கோரிய நிலையில், முழுநீள கான்கிரீட் சாலையை புதிதாக அமைக்க, பேரூராட்சி நிர்வாகம் ஒப்பந்தம் அளித்தது.
இச்சாலை, கலங்கரைவிளக்க சந்திப்பு - பகிங்ஹாம் கால்வாய்க்கரை சாலை சந்திப்பு என, சுற்றுலா போக்குவரத்து பகுதி என்பதால், பழைய கான்கிரீட் சாலையை முற்றிலும் பெயர்த்து, புதிய தார்ச்சாலை அமைக்க வலியுறுத்தினர்.பேரூராட்சி துறையினரோ, புதிதாக மட்டுமே கான்கிரீட் சாலையே அமைக்க உத்தரவிட்டனர். ஒப்பந்ததாரர், கடந்த அக்டோபர் மாதம், பழைய சாலையை பெயர்க்காமல், அதன் மீதே, சாலையின் ஒருபுறம் மட்டும், குறுகிய தொலைவு சாலை அமைத்து, மறுபுறம் அபாய பள்ளத்துடன் உள்ளது.
நான்கு மாதங்கள் கடந்தும் சாலை அமைக்கப்படாமல், இருசக்கர வாகன பயணியர், விபத்து அபாயத்துடன் கடக்கின்றனர். பெண்கள் நிலைதடுமாறி கவிழ்கின்றனர். எதிரெதிர் திசையில், வாகனங்கள் செல்லவும் இயலவில்லை. பணிகளை விரைந்து முடிக்க, நிர்வாகமும் அக்கறையின்றி அலட்சியமாக உள்ளது.