திருக்கழுக்குன்றம்:திருக்கழுக்குன்றத்தில் வாலிபரை கடத்திய ஆறு பேரை, போலீசார் கைது செய்தனர்.
திருக்கழுக்குன்றம், வன்னியர் தெருவைச் சேர்ந்தவர் சுசில்குமார் மகன் திலக்ராஜ், 25. போதை பழக்கம் உள்ளவர் எனக் கூறப்படுகிறது.நேற்று முன்தினம் மதியம் 2:00 மணிக்கு, திருக்கழுக்குன்றம் நாவலுார் சந்திப்பு பகுதியில், இவரிடம் மர்ம கும்பல் கத்தியை காட்டி மிரட்டி, 'இனோவா' காரில் கடத்தி, திருப்போரூர் அடுத்த, முள்ளிப்பாக்கம் வனப்பகுதி கூட்டிச்சென்றதாக கூறப்படுகிறது.
கும்பலைச் சேர்ந்த, பட்டரைவாக்கம் பகுதி ரவுடி பாபு மகன் வினோத்குமார், 37, என்பவர் அவரிடம், 'என்னுடைய பெயரை பயன்படுத்தி, திருக்கழுக்குன்றத்தில் கஞ்சா விற்கிறாயா' என கேட்டு, 50 ஆயிரம் ரூபாய் கொடுக்குமாறும், கடத்தி மிட்டியதை மற்றவரிடம் கூறினால், கொலை செய்து விடுவதாக மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.
அவர்களிடமிருந்து தப்பிய அவர், தான் கடத்தப்பட்டது குறித்து, திருக்கழுக்குன்றம் போலீசில் புகார் அளித்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிகுமார் உள்ளிட்ட போலீசார், பல பகுதிகளில் பதுங்கியிருந்த கும்பலை வளைத்தனர்.வினோத்குமார், பெரும்பாக்கம், தாஜூதீன் மகன் பாட்ஷா, 31, திருவடிசூலம், குமார் மகன் சேஷா, 25, மற்றும் ஜெகதீசன் மகன் கோதண்டன், 25, மேலையூர், செல்வமணி மகன் பிரபாகரன், 26, கரும்பாக்கம் டில்லி மகன் முருகன், 40, ஆகியோரை கைது செய்து, காரை பறிமுதல் செய்தனர்.
வினோத்குமார் குண்டர் தடுப்பு காவலில் சிறையில் இருந்து, இரண்டு மாதங்கள் முன் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.