அரசு, தனியார் கட்டுமான பணிகளுக்காக கல் குவாரிகள் மட்டும் ஏலம் விடப்படுகின்றன. தற்போது பத்துக்கும் மேற்பட்ட கல் குவாரிகள் மாவட்டத்தில் செயல்படுகின்றன. மேலுார், வாடிப்பட்டி உள்ளிட்ட 6 தாலுகாக்களில் 20 க்கும் மேற்பட்ட கல் குவாரிகள் ஏலம் விடப்படவில்லை.கடந்தாண்டு ஜனவரியில் இந்த குவாரிகள் பொது ஏலம் விடப்பட்டன.
ஆனால் அரசு நிர்ணயித்த குறைந்தபட்ச தொகை அதிகம் இருப்பதாக கூறி ஒப்பந்ததாரர்கள் கல் குவாரிகளை ஏலம் எடுக்க முன்வரவில்லை. குறைந்த பட்ச தொகையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என அரசுக்கு பரிந்துரைக்க அதிகாரிகளிடம் ஒப்பந்ததாரர்கள் வலியுறுத்தினர். ஆனால் இதுதொடர்பாக புவியியல் மற்றும் சுரங்கத்துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
முறைகேடு கிரானைட் குவாரிகள் மீதான விசாரணையும் கிடப்பில் போடப்பட்டுள்ளன.காலியான பணியிடங்கள்இத்துறையில் மதுரை மண்டல இணை இயக்குனராக இருந்த ஆறுமுகநயினார் சென்னைக்கு கடந்தாண்டு மாற்றப்பட்டார். அவருக்கு பதில் யாரும் நியமிக்கப்படவில்லை. திருச்சி மண்டல இணை இயக்குனர் மதுரையை கூடுதல் பொறுப்பாக கவனிக்கிறார்.
அவரும் இங்கு வருவதில்லை. துணை இயக்குனர் சட்டநாதன் உடல்நலக்குறைவால் விடுப்பில் சென்றுள்ளார். உதவி இயக்குனர் பணியிடமும் ஓராண்டாக காலியாகஉள்ளது. இதனால் கீழ்நிலை அதிகாரிகளால் கல் குவாரிகளை மறு ஏலம் விடுவது குறித்து எந்தவொரு முடிவும் எடுக்கமுடியவில்லை.