உடுமலை-திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த, 34 வருவாய் ஆய்வாளருக்கு (ஆர்.ஐ.,), 35 நாட்கள், நில அளவை பயிற்சி முகாம், ஏஞ்சல் கல்லுாரியில் நடைபெற உள்ளது.தமிழகத்தில், வருவாய்த்துறை என்பது நிர்வாகத்துறையாக இருக்கிறது. நிர்வாக திறன் வளர்ப்புக்காக, வருவாய்த்துறை அலுவலருக்கு, நில அளவை பயிற்சி, போலீஸ் பயிற்சி மற்றும் நீதித்துறை பயிற்சியும் அளிக்கப்படுகிறது.திருப்பூர் மாவட்டத்தில் உள்ள, முதுநிலை மற்றும் இளநிலை வருவாய் ஆய்வாளர்கள், 34 பேருக்கு, நில அளவை பயிற்சி அளிக்க, மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.தாராபுரம் ரோடு, ஏஞ்சல் பொறியியல் கல்லுாரியில் உள்ள பயிற்சி மையத்தில், வருவாய் ஆய்வாளருக்கான, நில அளவை பயிற்சி முகாம் நடைபெற உள்ளது.நில அளவை பயிற்சியில் பங்கேற்க உள்ள, 34 வருவாய் ஆய்வாளர் நிலை அலுவலர்கள், பணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். அந்தந்த அலுவலகங்களில், மாற்று ஏற்பாடுகளை செய்ய, மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.மாவட்ட வருவாய் அதிகாரிகள் கூறுகையில், 'நிர்வாகத்துறை என்பதால், தாசில்தாருக்கு, நான்கு மாதம் நீதித்துறை பயிற்சி அளிக்கப்படுகிறது; துணை தாசில்தாருக்கு, இரண்டு மாதம் போலீஸ் பயிற்சி அளிக்கப்படுகிறது.பதவி உயர்வு, அடுத்த நிலை பணி பொறுப்புகளை கவனிக்க, வருவாய் ஆய்வாளருக்கு, நில அளவை பயிற்சி அவசியம். அதன்படி, 35 நாட்கள் பயிற்சி அளிக்கப்படுகிறது. கொரோனா காரணமாக, கடந்த இரண்டு ஆண்டுகளாக, நில அளவை பயிற்சி நடைபெறவில்லை. நீண்ட இடைவெளிக்கு பிறகு, ஒரே இடத்தில், 34 நபர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இதன் வாயிலாக, நில அளவையில் உள்ள தொழில்நுட்பங்களை அறிந்துகொள்ள முடியும்,' என்றனர்.