உடுமலை-இனிவரும் நாட்களில், வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என்பதால் கால்நடைகளுக்கு எரிசக்தி மற்றும் புரதச்சத்து நிறைந்த தீவனத்தை அளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.உடுமலை, குடிமங்கலம் மற்றும் மடத்துக்குளம் ஒன்றியங்களில், கால்நடை வளர்ப்போர் பயன்பெறும் வகையில், பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.கால்நடை பாதுகாப்பு கருதி, உரிய ஆலோசனையும் அளிக்கப்படுகிறது. மழை காலத்தைவிட கோடையில், கால்நடைகள் அதிகளவில் பாதிக்கப்படும் என்பதால், எரிசக்தி மற்றும் புரதச்சத்து நிறைந்த தீவனத்தை அளிக்க, அறிவுறுத்தப்பட்டுள்ளது.கால்நடை டாக்டர்கள் கூறியதாவது:கோடையின்போது, கால்நடை பராமரிப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். கோடை காலத்தில் சூரிய கதிர்வீச்சு, காற்றின் ஈரப்பதம் மற்றும் வெப்பநிலையை பொறுத்து, கால்நடைகளுக்கு பாதிப்பு ஏற்படும். இதனால், கறவை மாடுகளில், பால் உற்பத்தி, 20 சதவீதம் வரை குறைய வாய்ப்புள்ளது. தவிர, சினைக்கு வரும் தன்மையும் பாதிக்கப்படும். எனவே, கால்நடைகளுக்குக் கோடையில் அதிகமான காற்றோட்டம் உள்ள இடங்கள் தேவை.அதிக எரிசக்தியும், புரதச்சத்தும் நிறைந்த தீவனம் அளிக்க வேண்டும். அதிகாலையிலும், மாலையிலும் கால்நடைகளை மேய்ச்சலுக்கு அழைத்துச்செல்ல வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.