உடுமலை-பட்டுக்கூடு விலை உயர்ந்தாலும், சீதோஷ்ண நிலை மாற்றம், நோய் தாக்குதல் உள்ளிட்ட காரணங்களினால், கூடு உற்பத்தி பாதியாக குறைந்துள்ளது. இதனால், விவசாயிகள் பாதித்துள்ளனர்.உடுமலை சுற்றுப்பகுதிகளில், வெண் பட்டுக்கூடு உற்பத்தி தொழில் அதிகளவு உள்ளது. மாவட்டத்தில், 2,778 ஏக்கர் பரப்பளவில், மல்பெரி செடி சாகுபடி செய்யப்பட்டு, 1,221 பட்டு புழு வளர்ப்பு மனைகள் மூலம், மாதம் தோறும், பல டன் பட்டுக்கூடு உற்பத்தி செய்யப்படுகிறது.மத்திய, மாநில அரசுகளின் பட்டு வளர்ச்சித்துறையால் அமைக்கப்பட்டுள்ள, முட்டை வித்தகங்களிலிருந்து, இளம் புழு வளர்ப்பு மனைகளில், முட்டை பொரித்து, 7 நாட்கள் பராமரித்து, பட்டுக்கூடு உற்பத்தி மனை அமைந்துள்ள விவசாயிகளுக்கு வினியோகம் செய்யப்படுகிறது.பட்டு புழு வளர்ப்பு மனைகளில், 21 நாட்களில், புழு வளர்ந்து, கூடு கட்டி, விற்பனைக்கு தயாராகும். பட்டுக்கூடுகளுக்கு தற்போது நல்ல விலை கிடைத்து வருகிறது. கர்நாடக மாநிலம் ராம்நகர் மார்க்கெட்டில், கிலோ, 700 முதல் 750 ரூபாய் வரையும், தமிழக மார்கெட்களில், 650 ரூபாய் வரையும் விற்று வருகிறது. ஆனால், விலை உயர்ந்தாலும், மகசூல் குறைவு காரணமாக, விவசாயிகள் பாதித்துள்ளனர்.சீதோஷ்ண நிலை மாற்றத்தால், பெருமளவு புழுக்கள் கூடு கட்டாமலும், இறந்தும், சுண்ணாம்பு கட்டி நோய் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளால், 50 சதவீதம் வரை உற்பத்தி குறைந்துள்ளது. விவசாயிகள் கூறியதாவது:சீதோஷ்ண நிலை மாற்றம், நோய்த்தாக்குதல், இளம்புழு வளர்ப்பில் உள்ள குளறுபடி உள்ளிட்ட பல்வேறு காரணங்களினால், தற்போது பட்டு புழு வளர்ப்பு மனைகளில், உற்பத்தி பெருமளவு பாதித்துள்ளது.வழக்கமாக, 90 முதல் 95 கிலோ வரை மகசூல் இருக்கும் மனைகளில், தற்போது, 50 கிலோ மட்டுமே உற்பத்தியாகிறது. இதனால், விலை உயர்ந்தாலும், விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.அதே போல், தமிழகத்தில், பட்டு நுால் உற்பத்தி நிறுவனங்கள் குறைவு காரணமாகவும், வியாபாரிகள் 'சிண்டிகேட்' காரணமாகவும் போதிய விலை கிடைப்பதில்லை. எனவே, பட்டுக்கூடுக்கு உரிய விலை கிடைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.பட்டுக்கூடு விவசாயிகளுக்கு உரிய தொழில் நுட்ப உதவிகள், முட்டை, இளம்புழு வளர்ப்பு மனை, பட்டுப்புழு வளர்ப்பு மனை ஆகியவற்றின் ஒருங்கிணைப்பு, பிளீச்சிங் பவுடர் உள்ளிட்ட மானிய விலையில் வழங்குதல், பட்டுக்கூடு கொள்முதல் மானியம் உள்ளிட்ட உதவிகளை அரசு வழங்க வேண்டும்.இவ்வாறு, விவசாயிகள் தெரிவித்தனர்.