உடுமலை-பள்ளிகளுக்கு இம்மாதம் இறுதிவரை விடுமுறை அறிவிக்கப்பட்டதால், ஒத்திவைக்கப்பட்ட பொதுத்தேர்வு மாணவர்களுக்கான திருப்புதல் தேர்வை, ஆன்லைன் முறையில் நடத்திட மாணவர்கள், கல்வியாளர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதால், பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. எனவே, ஜன., 19ம் தேதி நடக்கவிருந்த திருப்புதல் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. சில பள்ளிகளில் பாடத்திட்டங்களே இன்னும் முடிக்கப்படவில்லை. இந்நிலையில் திருப்புதல் தேர்வுகளும் தள்ளிவைக்கப்பட, மாணவர்களிடையே கற்றல் இடைவெளி மேலும் அதிகரிக்க வாய்ப்புண்டு.கல்வியாளர்கள் கூறியதாவது:கோவை மாவட்டத்தில் வகுப்பு ஆசிரியர்கள் மூலம் கேள்வித்தாள் தயாரித்து மாணவர்களுக்கு ஆன்லைன் தேர்வு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலும் இத்தகைய திட்டத்தை செயல்முறைப்படுத்தலாம். மொபைல் போன் இல்லாத மாணவர்கள் அருகிலுள்ள நண்பர்களிடம் வினாத்தாளை பெற்று தேர்வு எழுத அனுமதிக்கலாம். மாணவர்களுக்கும் பொதுத்தேர்வு குறித்த உத்வேகம் இருக்கும்.இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.