கோவை-ஊழியர்களை மரியாதையின்றி பேசும், அரசு போக்குவரத்து கழக அதிகாரிகளை கண்டித்து, தொழிலாளர் முன்னேற்ற சங்க நிர்வாகிகள், அரை நிர்வாணப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை கோட்ட அரசு போக்குவரத்துக் கழகத்தில் பணிபுரியும் உயர் அதிகாரிகள், ஊழியர்களை மரியாதை குறைவாக நடத்துவதாக, தொழிலாளர் முன்னேற்ற சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதைக்கண்டித்து, தொழிலாளர் முன்னேற்ற சங்கம் சார்பில் நேற்று தலைமை அலுவலகத்தில், அரை நிர்வாணப் போராட்டம் நடந்தது.தொழிலாளர் முன்னேற்ற சங்க பொதுச்செயலாளர் பெரியசாமி கூறுகையில், ''தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், கோவை மண்டலத்தில் அதிகாரிகள் ஊழியர்களை மிகவும் மரியாதையின்றி நடத்துகின்றனர். அனைத்து ஊழியர்களும் மனநிம்மதியின்றி பணியாற்றி வருகின்றனர்.கொரோனா தொற்று காலத்தில், ஊழியர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் ஏதாவது பாதிப்புக்கு உள்ளாகியுள்ள தகவல்களை கூறினாலும், அதை ஏற்க மறுக்கின்றனர்.சில அதிகாரிகள் விடுப்பை அனுமதிக்காமல், 'ஆப்சென்ட்' போட்டு ஊதியப்பிடித்தம் செய்து விடுவேன் என்கின்றனர். சஸ்பெண்ட் செய்து விடுவேன் என, மிரட்டி அனைவரின் மன அமைதியை கெடுத்தும், ஊழியர்கள் மத்தியில் தர்ம சங்கடத்தை உருவாக்கியும் வருகிறார்கள்,'' என்றார்.ஊழியர்களின் இந்த திடீர் போராட்டத்தால், பரபரப்பு ஏற்பட்டது.