தமிழக அரசு சார்பில், டில்லி குடியரசு தின அணிவகுப்புக்கு அனுப்பப்பட்ட ஊர்தி நிராகரிக்கப்பட்டதை கண்டித்து, ம.தி.மு.க., சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநகர மாவட்ட தலைவர் நாகராஜ் தலைமையில், ஊத்துக்குளி ரோடு, பாரப்பாளையம் பிரிவில் உள்ள வீரபாண்டி கட்டபொம்மன் சிலை முன் திரண்டனர்.'தமிழக அரசின் அலங்கார ஊர்திகளை வேண்டுமென்று மத்திய அரசு தவிர்த்துள்ளது. குடியரசு தின நாளில், தமிழக சுதந்திரப் போராட்ட வீரர்களை நினைவுகூர்வது ஏற்புடையது; அதனை விடுத்த புறக்கணித்த மத்திய அரசின் செயலை கண்டிப்பது,' என்று கூறி, கோஷம் எழுப்பினர். அங்கு வந்த போலீசார், ஆர்ப்பாட்டம் முடிந்த பின், அவர்களை அங்கிருந்து கலைந்து போகும்படி கூறினர். இதனால், அனைவரும் கலைந்து சென்றனர்.