புதுச்சேரி-'ரேஷன் கடைகளை சூப்பர் மார்க்கெட்டுகளாக தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது' என கவர்னர் தமிழிசை தெரிவித்தார்.கவர்னர் தமிழிசை, குடியரசு தின உரையில் கூறியிருப்பதாவது:தேசிய அளவில் சிறப்பாக நிர்வகிக்கப்படும் மாநிலங்களில் ஒன்றாக புதுச்சேரி திகழ்கிறது. 2021ம் ஆண்டில் பொது நிர்வாக குறியீடுகளின் அடிப்படையில் சிறந்த முறையில் நிர்வகிக்கப்படும் யூனியன் பிரதேசமாக புதுச்சேரி அறிவிக்கப்பட்டுள்ளது. சுகாதாரம், கல்வி, சமூக நலம் ஆகிய துறைகளில் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது.மக்கள் நலனில் அக்கறை கொண்டு செயல்படும் புதுச்சேரி அரசு கிராமப்புற பொருளாதாரத்தில் முதுகெலும்பாக திகழும் வேளாண் துறை, கால்நடை வளர்ப்பு ஆகியவற்றின் வளர்ச்சிக்கு உயர் முன்னுரிமை வழங்கி வருகிறது.பயிர் உற்பத்தி திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு உற்பத்தி மானியம், நெல் சாகுபடிக்கு ரூ.11.91 கோடி, கரும்புக்கு ரூ.2 கோடி, பருத்திக்கு ரூ.1.4 கோடி, விவசாய நிலமுள்ள குடும்பத்துக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வீதம் இதுவரை 11 ஆயிரத்து 187 விவசாயிகளுக்கு நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது.புதுச்சேரி, காரைக்கால் கிராமப்புற பகுதிகளில் மின்தேவையை பூர்த்தி செய்ய, தீனதயாள் உபாத்யாயா கிராமப்புற மின்வசதி திட்டத்தின் மூலம் மின் கட்டமைப்புகளை மேம்படுத்த ரூ.20 கோடி செலவில் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.மத்திய அரசு மறுசீரமைக்கப்பட்ட மின் விநியோக திட்டத்தை அறிவித்துள்ளது. இதனால் அனைத்து மின் நுகர்வோருக்கும் தடையற்ற, தரமான மின் வினியோகம் உறுதி செய்யப்படும்.பழைய மின் கடத்திகளை மாற்றுவது, புதிய மின் மாற்றிகளை நிறுவுவது, மேல்நிலை, தெரு மின் இணைப்புகளை புதைவடமாக மாற்றியமைப்பது, துணை மின் நிலையங்களை புனரமைத்து நவீனப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு பணிகள் இத்திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும்.சூரிய ஒளி, காற்றை பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கும் முறையை புதுச்சேரி புதுப்பிக்கவல்ல எரிசக்தி முகமை செயல்படுத்தி வருகிறது. இதன் மூலம் பல ஆயிரம் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதோடு, மாசற்ற மாநிலமாக புதுச்சேரியை மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.அதிகரித்து வரும் எரிசக்தி தேவையை, சூரிய மின்சக்தி உற்பத்தி மூலம் சீரான முறையில் பூர்த்தி செய்ய மத்திய அரசுடன் இணைந்து புதுச்சேரி அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.இதுவரை 870 கிலோவாட் திறன் கொண்ட சூரிய சக்தி உற்பத்தி நிலையங்கள் அமைக்கப் பட்டுள்ளன. சுற்றுலா தலங்களில் புதுப்பிக்கவல்ல எரிசக்தி திட்டங்களை மேம்படுத்த 100 சூரிய ஒளி எல்.இ.டி., தெருவிளக்குகள் நிறுவப்பட்டுள்ளன.புதுச்சேரி, காரைக்கால் பகுதியில் உள்ள கூட்டுறவு ரேஷன் கடைகளை சூப்பர் மார்க்கெட்டுகளாக தரம் உயர்த்த, கூட்டுறவு அபிவிருத்தி கழகத்திடம் நிதியுதவி பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.புதுச்சேரி கூட்டுறவு கட்டட மையத்தின் மூலம் பிரமதர் வீடு கட்டும் திட்ட பயனாளிகளுக்கு மணல் வினியோகிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. அதற்காக மணமேடு தென்பெண்ணையாற்று குவாரியை பயன்படுத்த உரிமத்தொகை செலுத்தப் பட்டுள்ளது.கொரோனாவை கட்டுப்படுத்த, பேரிடர் மீட்பு நிதியில் ரூ.15.57 கோடி ஒதுக்கப்பட்டு, பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. கொரோனாவால் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு ரூ.7.65 கோடி இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.கொரோனா பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தினாலும் மாநிலத்தின் சுகாதார கட்டமைப்பை மேம்படுத்தும் வாய்ப்பை அளித்துள்ளது.சுற்றுலாவை மேம்படுத்தவும், கட்டமைப்புகளை உருவாக்குவதிலும் அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.சாலை வசதி, ரயில் பாதை, விமான போக்குவரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விமான நிலைய விரிவாக்க பணிகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளது.ஆன்மிகம், மருத்துவம், கல்வி, இயற்கை சுற்றுலாவை மேம்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது.மாநிலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்காக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. மத்திய அரசின் மேலான ஒத்துழைப்பும், மக்களின் ஒத்துழைப்பும் மேம்பட்டு, மேலும் வளர்ச்சிப்பாதையை நோக்கி அரசு செல்லும் என்பதில் ஐயமில்லை.நெருக்கடி காலத்திலும் பொருளாதார சரிவில்லாமல் செயல்பட்ட மிக சில மாநிலங்களில் புதுச்சேரியும் ஒன்று. மக்களின் பொருளாதார வாழ்வியல் பாதிக்காத வகையில் தளர்வுகளுடன் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. மக்களின் ஒத்துழைப்போடு கொரோன பரவல் கட்டுப்படுத்தப் பட்டது. கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் மக்கள் தங்கள் ஆதரவை தொடர்ந்து அளிக்க வேண்டும். இதன்மூலம் பெருந்தொற்று சூழலில் இருந்து நாம் விடைபெற முடியும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.