நெய்வேலி-நெய்வேலியில் என்.எல்.சி., நிறுவனத்தின் சார்பில், குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.
என்.எல்.சி., ஒற்றாடல் துறை முதன்மை கண்காணிப்பு அதிகாரி சந்திரசேகர் தலைமை தாங்கினார். மின்துறை இயக்குநர் ஷாஜிஜான், நிதித்துறை இயக்குநர் ஸ்ரீனிவாஸ் ஜெயக்குமார் முன்னிலை வகித்தனர். மனிதவளத்துறை இயக்குநர் விக்ரமன் வரவேற்றார்.தேசியக்கொடியை ஏற்றி வைத்து, என்.எல்.சி., சேர்மன் ராகேஷ்குமார் பேசியதாவது., என்.எல்.சி., நிறுவனம் தேசிய தடுப்பூசி இயக்கத்துடன் இணைந்து ஒரு லட்சத்திற்கும் அதிகமான தடுப்பூசி டோஸ்களை வழங்கியுள்ளது.என்.எல்.சி., நிறுவனம் நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக நியாயமான இழப்பீடு மற்றும் பலன்களுடன் கூடிய திருத்தி அமைக்கப்பட்ட மறுவாழ்வு மற்றும் மறு குடியமர்வு கொள்கையை கொண்டு வந்துள்ளது.நெய்வேலி பகுதியில் கையகப்படுத்தப்படும் நிலங்களுக்கு இழப்பீட்டு தொகை ஒரு ஏக்கருக்கு குறைந்தப்பட்ச இழப்பீடு ரூ.23 லட்சம். 23 லட்சத்திற்கு மேல் தகுதியுள்ள நிலத்திற்கு, எந்த உச்சவரம்பும் இல்லாமல் சட்ட ரீதியான இழப்பீடும் வழங்கப்படும்.கிராமங்களில் கையகப்படுத்தப்படும் வீட்டுமனை நிலங்களுக்கு குறைந்தப்பட்சம் ஏக்கருக்கு இழப்பீடு ரூ. 40 லட்சம், நகர்புறத்தில் ஏக்கருக்கு ரூ.75 லட்சம் இழப்பீடு வழங்க மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்வு கொள்கையில் வழிவகை செய்யப்பட்டுள்ளது' என்றார்.நிகழ்ச்சியில் என்.எல்.சி.,யின் மூத்த தொழிலாளியான செல்வாம்பாள், அவரது கணவர் குணசேகரன் ஆகியோர் கவுரவிக்கப்பட்டனர்.