நடுவீரப்பட்டு-நடுவீரப்பட்டு அருகே கணவர் சாவில் சந்தேகம் இருப்பதாக மனைவி போலீசில் புகார் அளித்துள்ளார்.நடுவீரப்பட்டு அடுத்த வழிசோதனைபாளையம் கிழக்குதெருவை சேர்ந்தவர் குமார் மகன் புகழேந்தி,31; இவர் கடந்த 10 ஆண்டுகளாக துபாயில் வேலை செய்து வருகிறார். இவருக்கும் குறிஞ்சிப்பாடி அருகே உள்ள வெங்கடாம்பேட்டை கதிர்வேல் மகள் சுரேஷினி,26; என்பவருக்கும் கடந்த 2020 பிப்ரவரியில் திருமணம் நடந்தது. குழந்தை இல்லை.கடந்த 9 மாதங்களாக துபாயில் வசித்த புகழேந்தியும், சுரேஷினியும் பொங்கல் பண்டிகைக்கு வழிசோதனைபாளையம் வந்தனர். கடந்த 3 நாட்களுக்கு முன் சுரேஷினி வெங்கடாம்பேட்டையில் தனது தாய் வீட்டிற்கு கணவருடன் சென்றார். மனைவியை விட்டு விட்டு புகழேந்தி வழிசோதனைப்பாளையம் சென்றார்.நேற்று முன்தினம் 25ம் தேதி இரவு மனைவியை கூட்டி செல்ல வருவதாக புகழேந்தி போன் செய்தார். ஆனால் வெகு நேரமாகியும் வீட்டிற்கு வராததால் சுரேஷினி மற்றும் உறவினர்கள் புகழேந்தியை தேடினர். நேற்று காலை சிலம்பிநாதன்பேட்டை ஆதிமூலம் நிலத்தில் புகழேந்தி துாக்கில் தொங்குவதாக தகவல் கிடைத்தது.இதுகுறித்து தனது கணவரின் சாவில் சந்தேகம் இருப்பதாக சுரேஷினி கொடுத்த புகாரின் பேரில் நடுவீரப்பட்டு போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.