திருவொற்றியூர் :இலவச வேட்டி - சேலை, ஒரு செட் 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழக அரசு பொங்கல் பொருட்கள், கரும்பு, விலையில்லா வேட்டி - சேலை உள்ளிட்டவற்றை குடும்ப அட்டைதாரர்களுக்கு, ஆண்டுதோறும் வழங்கி வருகிறது.இம்முறை பொங்கல் பொருட்களோடு, 21 வகையான மளிகை உள்ளிட்ட பொருட்கள், குடும்ப அட்டைதாரர்களுக்கு வினியோகிக்கப்பட்டது. விலையில்லா வேட்டி - சேலை வாங்கும் சிலர், அவற்றை பயன்படுத்துவதில்லை. காரணம், உடுத்துவதற்கு ஏற்றாற் போல் தரமில்லாமல் இருப்பது தான். மாறாக சிலர், வீட்டில் குழந்தைகளுக்கு தொட்டில் கட்ட, வற்றல் காயப் போடுவதற்கு பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், வடசென்னையில் திருவொற்றியூர், வியாசர்பாடி, எண்ணுார், ராயபுரம் உள்ளிட்ட பல பகுதிகளில் சிலர், ஒரு செட் வேட்டி - சேலையை, 100 ரூபாய் வரை விலைக்கு விற்று, அதற்கு ஈடாக பிளாஸ்டிக், அலுமினியம் பாத்திரங்கள் வாங்குகின்றனர். சென்னையில் பல இடங்களில் இது போல் நடந்து வருகிறது.
விலையில்லா வேட்டி - சேலை திட்டம், ஏழை, பாமர மக்கள் பலருக்கும் மிகவும் பயனுள்ளதாக உள்ளது என்பதில் மாற்று கருத்து கிடையாது. ஆனால், சிலர் அவற்றை வாங்கி விலைக்கு விற்பது தான் பெரும் கவலையாக இருக்கிறது.சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து, விலையில்லா வேட்டி - சேலையை எதிர்பார்த்திருப்போர் பட்டியலை தயாரித்து, வினியோகிக்க வேண்டும். வேண்டாம் என்பவர்களுக்கு வழங்குவதை தவிர்க்கலாம்.இதன் மூலம், அரசுக்கு பல கோடி ரூபாய் மிச்சமாகும் என்பதே பெரும்பாலானோர் கருத்தாக உள்ளது.