சேலம்: நான்கு மாதமாக ஊதியமின்றி, அரசு பட்ட மேற்படிப்பு மருத்துவர்கள் தவித்து வருகின்றனர். சேலம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில், பட்ட மேற்படிப்பு மருத்துவர்கள், 150 பேர் வரை உள்ளனர். மருத்துவர் பற்றாக்குறையால், கூடுதல் பணிச்சுமையுடன் கொரோனா சிகிச்சை வார்டுகளிலும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு பணிமூப்பு தகுதிக்கு ஏற்ப, 50 ஆயிரம் முதல், 70 ஆயிரம் ரூபாய் வரை வழங்கப்படும் ஊதியம், நான்கு மாதமாக வழங்கப்படவில்லை. இதனால், விடுதியில் தங்கியிருப்போர், அத்தியாவசிய செலவுகளை கூட எதிர்கொள்ள முடியாமல் தவிப்பதாக கவலை தெரிவித்துள்ளனர். மேலும் இம்மாத இறுதிக்குள் நான்கு மாத ஊதியம் வழங்காவிட்டால், போராட்டம் நடத்துவதை தவிர வேறு வழியில்லை என, பட்ட மேற்படிப்பு மருத்துவர்கள் தெரிவித்தனர். மருத்துவ கல்வி இயக்குனர் நாராயணபாபு கூறுகையில், ''இரண்டொரு நாளில் ஊதியம் வழங்க, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.