சூலுார்:இருகூர் பேரூராட்சியில் எங்கு பார்த்தாலும் குப்பை, மலை போல் குவிந்து கிடப்பதால், நோய் பரவும் அச்சத்தில் பொதுமக்கள் உள்ளனர்.இருகூர் பேரூராட்சியில், காமாட்சிபுரம், ராவத்துார், அத்தப்பகவுண்டன்புதுார் உள்ளிட்ட பகுதிகள் உள்ளன. 18 வார்டுகள் உள்ளன. 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர்.
இந்நிலையில், பேரூராட்சி முழுக்க குப்பை முறையாக அகற்றப்படாமல் மலை போல் குவிந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.காமாட்சிபுரம் மக்கள் கூறியதாவது:எங்கள் பகுதியில் உள்ள சூர்யா நகர் மைதானம் அருகே பல வாரங்களாக குப்பை அள்ளப்படவில்லை. அதனால், மலை போல் குவிந்து கிடக்கிறது. குப்பையில் இருந்து ஈக்கள் வீடுகளுக்கு படையெடுக்கின்றன. இதனால், உணவு உண்ண முடியவில்லை. சுற்றுப் பகுதியில் கடும் சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது.விதவிதமான நோய்கள் ஏற்படும் அச்சம் ஏற்பட்டுள்ளது.
முதியவர்கள், சிறுவர்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.இங்கு மட்டுமில்லாமல் பேரூராட்சியின் பல பகுதிகளிலும் இதேபோல், குப்பை குவிந்து கிடக்கிறது.பேரூராட்சி நிர்வாகத்துக்கும், துாய்மை பணியாளர்களுக்கும் இடையில் நடக்கும் பிரச்னையால், குப்பை அகற்றுவது முறையாக நடப்பதில்லை.குப்பையை அகற்ற, பேரூராட்சி நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.