கோவில்பாளையம்:'எந்த அடிப்படை வசதியும் இல்லை' என, இ.பி., காலனி மற்றும் குமரன் நகர் மக்கள் கண்ணீர் வடிக்கின்றனர்.கோவில்பாளையம் பேருராட்சி, குரும்பபாளையத்தில் உள்ளது இ.பி. காலனி மற்றும் குமரன் நகர். இங்கு 350 வீடுகள் உள்ளன. இந்த பகுதியில் எந்த அடிப்படை வசதியும் இல்லை என மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.இப்பகுதி மக்கள் கூறுகையில், 'இங்கு ரேஷன் கடை இல்லை. 2.5 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள வில்லேஜ் நகர் சென்று ரேஷன் பொருள் வாங்க வேண்டியுள்ளது. இங்கே, முதல் விதி, குறுக்கு வீதி உள்பட பல வீதிகளில் காங்கிரீட் அல்லது தார் ரோடு போடப்படவில்லை. இதனால் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளோம். மக்கள் சேர்ந்து குழிகளில் மண் நிரப்பி சமன்படுத்தி உள்ளோம். பெரும்பாலான வீதிகளில் தெருவிளக்குகள் இல்லை. இதனால் இரவு நேரத்தில் இப்பகுதி இருளில் மிதக்கிறது. 10 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் சப்ளை ஆவதால் குடிநீருக்காக அலை மோத வேண்டி உள்ளது. பற்றாக்குறைக்கு போர்வெல் அமைத்து தரக்கோரி பல மாதங்களாகப் போராடி வருகிறோம். போர் வெல்லும் அமைக்கப்படவில்லை. ஆற்று நீரும் குறைவாக வருகிறது.இந்த கோரிக்கைகள் குறித்து பேரூராட்சி அலுவலகத்திலும் கோவை கலெக்டர் அலுவலகத்திலும் பல முறை மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை. விரைவில் பேரூராட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இப்போதாவது அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும்' என்றனர்.