தாம்பரம் ரயில் நிலையம் - ஜி.எஸ்.டி., சாலை இணைப்பு நடைமேம்பாலப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டு, வரும் மார்ச் மாதத்தில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.தாம்பரம் பஸ் நிலையம் - ஜி.எஸ்.டி., சாலை - தாம்பரம் ரயில் நிலையம் இடையே, 9.42 கோடி ரூபாய் செலவில், நகரும் படிக்கட்டுகளுடன் நடை மேம்பாலம் அமைக்கும் நடந்தது. இதில், தாம்பரம் பஸ் நிலையம் - ஜி.எஸ்.டி., சாலை - தாம்பரம் ரயில் நிலைய முகப்பு வரை பணி முடிக்கப்பட்டது. கடந்த 2021 பிப்ரவரியில் பயணியர் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது.இத்திட்டத்தில், ஜி.எஸ்.டி., சாலை - தாம்பரம் ரயில் நிலைய முதலாவது நடை மேடை வரை, இணைப்பு நடை மேம்பால கட்டுமான பணி மந்தகதியில் நடந்தது. 50 மீட்டர் துாரம் நடை மேம்பால பணி நிறைவடைந்த நிலையில், மீதமுள்ள பணி கிடப்பில் போடப்பட்டது.பொதுமக்களின் கோரிக்கையை அடுத்து, அரசு மற்றும் ரயில்வே நிர்வாகம் மீண்டும் பணிகளை துவக்கியுள்ளன.இது குறித்து, ரயில்வே திட்ட பிரிவு அதிகாரி கூறியதாவது:'நடை மேம்பால கட்டுமான பணி, அரசு மற்றும் ரயில்வே நிர்வாகத்தால் மேற்கொள்ளப்படுகிறது. கொரோனா ஊரடங்கால் பணிகளை துரிதமாக நடத்த முடியவில்லை. தற்போது, தேவையான வேலை ஆட்களை பயன்படுத்தி, கட்டுமான பணியை விரைந்து முடிக்க, நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.நடை மேம்பாலத்துக்கு பிரமாண்ட இரும்பு துாண்கள் அமைக்கும் பணியும், துாண்களின் மீது பாலம் அமைக்கும் பணியும் நடக்கிறது. மார்ச் 31க்குள் பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார். -- நமது நிருபர் -