சோமனுார்:கூலி உயர்வு பேச்சுவார்த்தை மீண்டும் தோல்வி அடைந்ததால், போராட்டத்தை தீவிரப்படுத்த விசைத்தறியாளர்கள் சங்க கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.புதிய கூலி உயர்வை அமல்படுத்தக் கோரி, கோவை, திருப்பூர் மாவட்டத்தில், கடந்த, 9ம் தேதி மு
தல் விசைத்தறியாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், தினமும், ரூ. 60 கோடி அளவுக்கு உற்பத்தி பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.கடந்த, 10 மற்றும், 20ம் தேதி நடந்த பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்தன. இதனால், போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்த முடிவு செய்த விசைத்தறியாளர்கள், கடந்த, 24ம் தேதி காரணம் பேட்டையில் கோரிக்கையை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். மறுநாள், முதல்வர் தனிப்பிரிவுக்கு தபால் அனுப்பும் போராட்டத்தை நடத்தினர்.
இவற்றில், பல ஆயிரம் விசைத்தறியாளர்கள் பங்கேற்றனர்.இதற்கிடையில், கோவை தொழிலாளர் நல அலுவலகத்தில், மூன்றாவது பேச்சுவார்த்தை அதிகாரிகள் முன்னிலையில் நடந்தது. இதில் பங்கேற்ற ஜவுளி உற்பத்தியாளர்கள், நூல் விலை ஏற்றம், கொரோனா பாதிப்பால் தொழிலில் மந்தநிலை நீடிப்பதால், கூலி உயர்வு வழங்க இயலாத நிலையில் உள்ளதாக கூறினர்.அமைச்சர்கள் முன்னிலையில் கூலி உயர்வு ஒப்பந்தம் செய்து விட்டு, தற்போது தர இயலாது எனக்கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.
பல லட்சம் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, புதிய கூலி உயர்வை அமல்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், என, விசைத்தறியாளர்கள் தரப்பில் வாதிட்டனர்.பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படாததால், வரும், பிப்., 3ம் தேதிக்கு பேச்சுவார்த்தையை அதிகாரிகள் ஒத்தி வைத்தனர். இதையடுத்து, இன்று மாலை , சோமனூரில் கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் சங்க கூட்டைமைப்பு நிர்வாகிகள் கூட்டத்தை கூட்டியுள்ளனர். அதில், போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்துவது குறித்து ஆலோசிக்க உள்ளதாக நிர்வாகிகள் கூறினர்.