பெ.நா.பாளையம்;நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டதை தொடர்ந்து, பேரூராட்சி பகுதிகளில் உள்ள அரசியல் கட்சிகளின் சின்னங்கள், பிரசார போஸ்டர்கள் ஆகியவற்றை அழிக்கும் பணியில் பேரூராட்சி ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டனர்.நரசிம்மநாயக்கன்பாளையம், பெரியநாயக்கன்பாளையம், வீரபாண்டி பேரூராட்சிகளிலும், கூடலூர் கவுண்டம்பாளையம் நகராட்சியிலும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு கொண்டு வரப்பட்டன.நரசிம்மநாயக்கன்பாளையம் அருகே பால விநாயகா நகர் பிரிவு பாலத்தில் வரையப்பட்டிருந்த தி.மு.க., அரசியல் விளம்பரங்களை பேரூராட்சி ஊழியர்கள் சுண்ணாம்பு பூசி மறைத்தனர். நரசிம்மநாயக்கன்பாளையம் பஸ் ஸ்டாண்டில், அ.தி.மு.க., சார்பில் நிறுவப்பட்டிருக்கும் பயணிகள் நிழல் குடையில், அ.தி.மு.க.,வின்இரட்டை இலை சின்னம், வாசகங்கள் ஆகியவை துணியால்மறைத்து கட்டப்பட்டன. இதேபோல, ஆங்காங்கே, அ.தி.மு.க., தி.மு.க., பா.ஜ., காங்., கம்யூ., கட்சிகளின் பிரசார வாசகங்கள் அடங்கிய போஸ்டர்களை அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.