வடபழநி : வடபழநி பகுதியில் பல நாள் பிரச்னைகளான, கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் சாலை உள்ளிட்ட பிரச்னைகளுக்கு தீர்வு காணப்பட்டிருப்பதால், மக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.சென்னை, வடபழநி, 130 வது வார்டில், 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இங்கு பாதாள சாக்கடை, குடிநீர் பிரச்னை, தரமான சாலையின்மை போன்ற பிரச்னைகள், பல ஆண்டுகளாக நீடித்து வந்தன.சென்னையின் மையப்பகுதியாக இருந்தாலும், இந்த வார்டின் பிரச்னையை யாரும் கண்டு கொள்ளவில்லை. இதுகுறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கைஇல்லை.இந்நிலையில், அதே பகுதியை சேர்ந்த தி.மு.க., பிரமுகரும், சமூக சேவகருமான கமலஹாசன், கொரோனா காலத்தில், பகுதியை சேர்ந்த ஏழை மக்களுக்கு உணவு உள்ளிட்ட நிவாரண பொருட்களை வழங்கி உதவினார். அவரிடம் அப்பகுதி மக்கள், தங்கள் பிரச்னைகளை எடுத்துக் கூறினர்.இதையடுத்து, இப்பிரச்னைகள் குறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவித்து, பிரச்னைகளை களைய, கமலஹாசன் தீவிர முயற்சிகள் மேற்கொண்டார். பக்தவத்சலம் காலனி முதல் தெருவில், ஆறு ஆண்டுகளாக சாலை போடப்படாமல் இருந்தது. தற்போது, இங்கு சாலைக்கு அமைக்க ஆயத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதேபோல், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் குடிநீர் பிரச்னைக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால், அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.இது குறித்து கமலஹாசன் கூறியதாவது:வடபழநி, 130 வது வார்டில் உள்ள பிரச்னைகள் குறித்தும், அதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் பகுதி மக்கள் என்னிடம் கூறினர்.தி.நகர் எம்.எல்.ஏ., கருணாநிதி அறிவுறுத்தல் படி, சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் இதுகுறித்து தகவல் தெரிவித்தேன்.அதன் படி, சாலை, கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் குடிநீர் உள்ளிட்ட பிரச்னைகளுக்கு தீர்வு காணப்பட உள்ளது. அதற்கான ஆயத்தப்பணிகள் நடக்கின்றன.இவ்வாறு அவர் கூறினார்.