சென்னை, : நீதிமன்ற உத்தரவையடுத்து, ஈஞ்சம்பாக்கம், பெத்தேல் நகரில் ஆக்கிரமிப்புகள் இரண்டாவது நாளாக நேற்றும் அகற்றப்பட்டன.சோழிங்கநல்லுார் மண்டலம், 196வது வார்டு, ஈஞ்சம்பாக்கம், பெத்தேல்நகரில், அரசுக்கு சொந்தமான 160 ஏக்கரில், நீர்நிலையான 'களுவேலி' மற்றும் 'மேக்கால்' புறம்போக்கு நிலம் உள்ளது.இதில், 52 ஏக்கர் பரப்பை, உள்ளூர் அரசியல்வாதிகள் அபகரித்து, சொற்ப விலைக்கு பொதுமக்களுக்கு விற்பனை செய்துள்ளனர். இந்த வகையில், 2018ம் ஆண்டு கணக்கெடுப்புபடி, 1,570 வீடுகள் உள்ளன.இதில், 1,000க்கும் மேற்பட்ட வீடுகள், களுவேலி பிரிவிலும்; 500க்கும் மேற்பட்ட வீடுகள், மேக்கால் புறம்போக்கு பிரிவிலும் உள்ளன.களுவேலி இடத்தின் மைய பகுதியில் மேக்கால் புறம்போக்கு இருப்பதுடன், களுவேலி பிரிவு நீர்நிலையாக உள்ளதால், வெள்ள நீரோட்டம் மேக்கால் புறம்போக்கு பகுதியையும் சூழ்ந்து கொள்ளும்.இதனால், மொத்த குடியிருப்புகளையும் அகற்ற, நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன்படி, ஆக்கிரமிப்பாளர்களுக்கு, வருவாய்த் துறை 'நோட்டீஸ்' வழங்கியது.இந்நிலையில், 24ம் தேதி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, உத்தரவை அமல்படுத்தாத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என, நீதிபதிகள் கூறினர்.ஆக்கிரமிப்பு அகற்றியது தொடர்பாக, இன்று அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.இதையடுத்து ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி, நேற்று முன்தினம் மற்றும் நேற்று நடந்தது. மொத்தம், 150 வணிக நிறுவனங்களின் மின் இணைப்பு துண்டித்து, 'சீல்' வைக்கப்பட்டது.அதேபோல், ஆக்கிரமிப்பில் இருந்த ௧௨௦ காலிமனைகள் மீட்டு, அதில் இருந்த கட்டடங்கள் இடிக்கப்பட்டன. போராட்டத்தில் ஈடுபட்ட ஆக்கிரமிப்பாளர்களை, போலீசார் பேச்சு நடத்தி அப்புறப்படுத்தினர்.