சென்னை : சென்னை எம்.ஜி.ஆர்., சென்ட்ரல், எக்ஸ்பிரஸ் ரயில் நிலையம் அருகே உள்ள தெற்கு ரயில்வே தலைமை அலுவலகம், 1922 டிச., 11ம் தேதி திறந்து வைக்கப்பட்டது. கவர்னர் வெலிங்டன் பிரபு தலைமையகத்தை துவக்கி வைத்தார். தலைமையகம் துவக்கப்பட்டு, 100 ஆண்டுகள் ஆனதையொட்டி, சிறப்பு அஞ்சல் உறை நேற்று வெளியிடப்பட்டது.தெற்கு ரயில்வே தலைமை அலுவலகத்தில் நடந்த விழாவில், தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தின் தலைமை போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் பி.செல்வகுமார் சிறப்பு அஞ்சல் உறையை வெளியிட, தெற்கு ரயில்வே பொதுமேலாளராக பொறுப்பேற்றுள்ள, கூடுதல் பொது மேலாளர் பி.ஜி.மல்யா பெற்றுக்கொண்டார்.அஞ்சல் உறை வாங்க விரும்புவோர், சென்னை அண்ணாசாலையில் உள்ள தலைமை அஞ்சலகத்தில், 20 ரூபாய் கொடுத்து வாங்கி கொள்ளலாம்.