மூலக்கொத்தளம் :மூலக்கொத்தளத்தில், சுற்றுச்சூழல் துறை அனுமதி கிடைக்காததால், குடிசை மாற்று வாரியத்தால் 138 கோடி ரூபாயில் கட்டப்பட்டுள்ள ௧,௦௪௪ குடியிருப்புகள் பயனாளிகளுக்கு ஒதுக்கப்படாமல், பயனின்றி உள்ளன.மூலக்கொத்தளம் சுடுகாடு, 400 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. மூலக்கொத்தளம் சுடுகாட்டையொட்டி, ராம்தாஸ் நகர் பகுதியை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் குடிசை வீடுகளில் வசித்து வந்தனர்.தங்களின் வாழ்வாதாரம் பாதிக்காமல், அந்த இடத்திலேயே வீடு கட்டிக் கொடுக்க வேண்டும் என, அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.மூலக்கொத்தளம் சுடுகாடுக்கு 35.43 ஏக்கர் நிலம் உள்ளது. அதில், மயானத்துக்கென 23.92 ஏக்கர் நிலம் போக, காலியாக 11.51 ஏக்கர் நிலம் உள்ளது.
இந்த இடத்தில், அப்பகுதியில் உள்ள குடிசை பகுதி மக்களுக்கு, 'பிரதமரின் அனைவருக்கும் வீட்டு வசதி திட்டத்தின்' கீழ், 138 கோடியே 29 லட்சம் ரூபாய் செலவில், 1,044 அடுக்கு மாடி குடியிருப்பு வீடுகள் கட்ட முடிவு செய்யப்பட்டது.இதற்காக மயானத்தில் காலியாக இருந்த 11.51 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டது.இதையடுத்து, 2018ல், அ.தி.மு.க., அரசு காலத்தில், மூலக்கொத்தளத்தில், 84.2 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 648 வீடுகள் உடைய ஒரு குடியிருப்பும், 54 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 396 வீடுகள் உடைய மற்றொரு குடியிருப்பும் அமைக்கும் கட்டுமான பணிகள் துவங்கின.இந்த கட்டடங்கள், 2019 மற்றும் 2020ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டன.
விண்ணப்பம்ஆனால், மாசு கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி பெறாமல், இந்த கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும், இக்கட்டடத்திற்கு குடிநீர், கழிவு நீர், மின்சார இணைப்புகள் வழங்கவில்லை. அதற்கு, சி.எம்.டி.ஏ., இன்னும் அனுமதி தரவில்லை.இதனால், கட்டுமான பணிகள் முடிவடைந்து ஓராண்டாகியும், இதுவரை பயனாளர்களுக்கு வழங்கப்படாமல் உள்ளது.இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:சுற்றுச்சூழல் துறை அனுமதி பெறாமல், 13 மாடி கட்டடம் கட்டப்பட்டு உள்ளது.இது குறித்து சுற்றுச்சூழல் துறை அதிகாரிகளிடம் கேட்டால், நிலத்தை வகை மாற்றம் செய்யாததால் அனுமதி தரவில்லை என்கின்றனர்.சுற்றுச்சூழல் துறை அனுமதி பெற்று குடிநீர், மின்சாரம் இணைப்பு வழங்கி ஒரு மாதத்திற்குள், ஏழை மக்களுக்கு அந்த வீடுகள் ஒதுக்கீடு செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
இது குறித்து குடிசை மாற்று வாரிய உயரதிகாரிகள் கூறியதாவது:மூலக்கொத்தளம் குடியிருப்புகளுக்காக சுற்றுச்சூழல் அனுமதி பெறுவதற்காக, மாநில சுற்றுச்சூழல் மதிப்பீட்டு குழுவின் வாரியத்தின் மூலம் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.இம்மதிப்பீட்டு குழு, சுற்றுச்சூழல் அனுமதி வழங்க பரிந்துரை செய்து, மாநில சுற்றுச்சூழல் மதிப்பீடு ஆணையத்திற்கு அனுப்பியுள்ளது.இன்னும் ஓரிரு மாதத்தில் அனுமதி பெற்ற பின், இக்குடியிருப்புகளுக்கு மின்சாரம், குடிநீர் இணைப்பு பெறப்படும். விரைவில் அனைத்து பணிகளும் முடிந்து, பயனாளிகளுக்கு வீடுகள் ஒதுக்கீடு செய்யப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.