சென்னை, : சென்னை பெருநகரில், விதிமீறல் இருப்பதால் பணிகளை நிறுத்த 'நோட்டீஸ்' வழங்கப்பட்ட 64 கட்டுமான திட்டங்கள் விஷயத்தில், சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் மவுனமாக இருப்பதாக புகார் எழுந்துள்ளது.சென்னையில் விதிமீறல் கட்டடங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியது சி.எம்.டி.ஏ.,வின் பணி.ஆனால், சி.எம்.டி.ஏ., அமலாக்க பிரிவு அதிகாரிகள், இந்த விஷயத்தில் மிகுந்த அலட்சியத்துடன் இருப்பதாக தொடர்ந்து புகார்கள் வருகின்றன.நகர், ஊரமைப்பு சட்டப்படி, விதிமீறல் புகார்கள் வந்தால் சம்பந்தப்பட்ட கட்டடத்தை ஆய்வு செய்து சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் 'நோட்டீஸ்' கொடுக்க வேண்டும்.இந்த வகையில், கடந்தாண்டு 64 கட்டடங்களில் விதிமீறல்கள் இருப்பது தெரிய வந்தது.இதன் அடிப்படையில், இந்த கட்டடங்களுக்கு பணி நிறுத்த 'நோட்டீஸ்' வழங்கப்பட்டது. சட்டப்படி, இந்த நோட்டீஸ் வழங்கப்பட்டதில் இருந்து மூன்று நாட்களுக்குள், உரிய கட்டட வரைப்படத்தை கட்டுமான நிறுவனம் தாக்கல் செய்ய வேண்டும்.இதை ஆய்வு செய்ய விளக்கம் கேட்க, 30 நாட்கள் வரை அவகாசம் அளிக்கப்படும். இதற்கு பின்னும் விதிமீறல் இருப்பது உறுதியானால், அந்த கட்டடத்துக்கு 'சீல்' வைப்பதற்கான நோட்டீஸ் அளித்து, அதற்கான நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும்.ஆனால், கடந்தாண்டு பணி நிறுத்த நோட்டீஸ் வழங்கப்பட்ட 64 கட்டடங்கள் விஷயத்தில், அதிகாரிகள் அடுத்தகட்ட நடவடிக்கை எடுத்தனரா என்ற கேள்வி எழுந்து உள்ளது.இது குறித்து நகரமைப்பு வல்லுனர்கள் கூறியதாவது:விதிகளை மீறிய 64 கட்டடங்களுக்கு 'நோட்டீஸ்' வழங்கிய சி.எம்.டி.ஏ., அதிகாரிகள், அதன் மீதான தொடர் நடவடிக்கையில் அமைதியாக இருக்கின்றனர். இதனால், இந்த கட்டடங்களில் விதிமீறல் உள்ளதா, இல்லையா என்ற குழப்பம் மக்கள் மத்தியில் எழுகிறது.இந்த குறிப்பிட்ட திட்டங்களில் வீடு வாங்குவோர், சரியான முடிவை எடுக்க முடியாமல் தவிக்கின்றனர். விதிமீறல் இருப்பதாக பெயரளவுக்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டதா அல்லது தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டதா என்பதை அதிகாரிகள் வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.