'சென்னை மாநகராட்சியில் நடைபெறும் சாலை பணிகளில் குளறுபடிகள் இருந்தாலோ அல்லது சாலைகள் தரமற்ற வகையில் அமைக்கப்பட்டாலோ, அது குறித்து பொதுமக்கள் நேரடியாக புகார் அளிக்கலாம்' என, மாநகாரட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி அழைப்பு விடுத்துள்ளார். 'முறைகேட்டில் ஈடுபடும் ஒப்பந்ததாரர்கள் மற்றும் அதற்கு துணைபோகும் அலுவலர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' எனவும் கமிஷனர் எச்சரித்து உள்ளார். கடந்த ஆண்டு இறுதியில் பெய்த வரலாறு காணாத பருவமழையால், சென்னை மாநகரின் பல இடங்களில் மழை நீர் தேங்கியது.இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. தேங்கிய நீரை வடியச் செய்ய, சாலைகளை சேதப்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. தவிர, அதீத கனமழை காரணமாக, சாலைகளில் திடீர் பள்ளங்கள் ஏற்பட்டன. பல இடங்களில் சாலைகளில் பிளவுகள் ஏற்பட்டு குண்டும், குழியுமானதால், வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகினர். இதையடுத்து, உடனடியாக மண்டலத்துக்கு, 2 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்து, பள்ளம் விழுந்த சாலைகளை, தற்காலிகமாக சீரமைக்க மாநகராட்சி உத்தரவிட்டது. அதன்படி, சென்னை மாநகராட்சி நிர்வாகத்தில் உள்ள, சாலைகள் கணக்கெடுக்கப்பட்டு, சீரமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.சென்னை மாநகராட்சியில், 1,537 பேருந்து வழித்தட சாலை மற்றும் உட்புற சாலைகள், 197.25 கோடி ரூபாய் செலவில் சீரமைக்கப்படுகின்றன.தற்போது வரை, ஒன்பது சாலை பணிகள் முடிந்துள்ளன. மேலும், 1,143 சாலை பணிகள் நடந்து வருகின்றன.வாகன ஓட்டிகளுக்கு பாதிப்பில்லாத வகையில், நள்ளிரவில் நடைபெறும் பணிகளில் சாலை தரமற்றதாக இருந்தால், மாநகராட்சியில் புகார் அளிக்க, கமிஷனர் ககன்தீப் சிங் பேடி அழைப்பு விடுத்துள்ளார்.அவர் கூறியிருப்பதாவது:சாலை பணிகளை மேற்கொள்ளும் ஒப்பந்தாரர் அனைத்து விதிகளையும் கடைபிடிக்க வேண்டும். பாதாள சாக்கடையின், மேன்ஹோல் மட்டமும், சாலை மட்டமும் ஒரே அளவில் இருக்க வேண்டும்.விபத்து ஏற்படுத்தும் வகையில் பள்ளம், மேடாக இருந்தால், ஒப்பந்தாரர் அதை சரி செய்ய வேண்டும். சாலை அமைக்கும் பணியில், 100 சதவீத அடிப்படையில், தாரின் அளவு, 5.5 சதவீதமாகவும், ஜல்லி கலவையின் அளவு, 94.5 சதவீதமாக இருத்தல் வேண்டும். தாரின் வெப்பநிலை, 120 டிகிரி சென்டிகிரேட் அளவில் இருக்க வேண்டும். சாலையை போடும்போது, மாநகராட்சியின் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள், பொறியாளர்கள் நேரடியாக ஆய்வு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. தன்னார்வலர்கள், பொதுமக்களும் பணிகளை கண்காணித்து, தவறுகள் நடக்கும் பட்சத்தில், மாநகராட்சிக்கு தகவல் அளிக்கலாம். அந்தந்த மண்டலங்களிலோ, மாநகராட்சி தலைமை அலுவலகத்திலோ, மக்கள் நேரடியாக புகார் செய்யலாம் அல்லது 1913 என்ற தொலைபேசி எண்ணில் புகார் தெரிவிக்கலாம். தவறு நடந்திருந்தால் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும். முறைகேட்டில் ஈடுபடும் ஒப்பந்ததாரர்கள் மீது நடவடிக்கை எடுப்பதுடன், அவர்களுக்கு துணை போகும் அலுவலர்கள் மீதும் நடவடிக்கை பாயும். இவ்வாறு ககன்தீப் சிங் பேடி கூறியுள்ளார். சாலை அமைக்கும் பணி குறித்து, மாநகராட்சி சாலைகள் துறை மேற்பார்வை பொறியாளர் சரவணபவானந்தம் கூறியதாவது:சென்னை மாநகராட்சியில், 387 கி.மீ., நீளமுள்ள, 471 பேருந்து வழித்தட சாலைகள்; 5,270.33 கி.மீ., நீளமுள்ள, 34 ஆயிரத்து 640 உட்புற சாலைகள் உள்ளன. இவற்றில், 294.10 கி.மீ., நீளமுள்ள, 1,456 சாலைகளை சீரமைக்க, மாநகராட்சி ஒப்பந்தம் கோரியுள்ளது.அதில், 2.08 கி.மீ., நீளமுள்ள, ஒன்பது சாலைகள் போடப்பட்டுள்ளன. மேலும், 188.16 கி.மீ., நீளமுள்ள சாலை பணிகள் நடந்து வருகின்றன. மீதமுள்ள சாலை அமைக்கும் பணிகள் விரைந்து துவங்கப்பட உள்ளன. தொடர்ந்து, சேதமடைந்த சாலைகள் கணக்கெடுத்து, ஒப்பந்தம் கோரும் பணிகள் நடந்து வருவதால், இந்த எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கும்.இந்த சாலை பணிகளுக்காக, 197.25 கோடி ரூபாய், சிங்கார சென்னை 2.0 திட்டம், தமிழக நகர்ப்புற சாலை உட்கட்டமைப்பு திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படுகிறது.இவ்வாறு, அவர் கூறினார்.சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து சாலைகளும் கணக்கெடுக்கப்பட்டு, ஒப்பம் கோரப்பட்டு வருகிறது. பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பாதிக்கப்படாத வகையில், சாலை பணிகள் அனைத்தும், நள்ளிரவில் மேற்கொள்ளப்படுகிறது. அனைத்து சாலைகளும் 'மில்லிங்' செய்யப்பட்டு, புதிதாக சாலைகள் அமைக்கப்படுகிறது. இதுபோன்று உரிய முறையில் அமைக்கப்படாத சாலைகள் குறித்து, தகவல் அளிக்கும்பட்சத்தில், ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கப்படும்.- ராஜேந்திரன், தலைமை பொறியாளர், சென்னை மாநகராட்சி.
- நமது நிருபர் -