சென்னை : குறைந்த விலைக்கு கார்கள் வாங்கித் தருவதாக, 2.16 கோடி ரூபாய் மோசடி செய்த, பெங்களூரு வாலிபரை, மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.கர்நாடக மாநிலம், பெங்களூருவைச் சேர்ந்தவர் நவீன், 31. இவர், சென்னை கே.கே.நகரில், 'பாரத் பெங்களூரு புட்பால் கிளப்' நடத்தி வந்தார். இவர், சென்னையைச் சேர்ந்த குமரவடிவேல் என்பவரிடம்,'முன்னணி நிறுவனங்களின் புதிய கார்களை, 30 சவீதம் குறைவான விலையில் உங்களுக்கு வாங்கித் தருகிறேன்' எனக் கூறியுள்ளார்.இவரது பேச்சை நம்பி, குமாரவடிவேல் மற்றும் நண்பர்கள், 19 கார்கள் வேண்டும் என, விலை பேசி, 2.16 கோடி ரூபாய் கொடுத்துள்ளனர். ஆனால், நவீன் கார்கள் வாங்கித் தராமலும், பணத்தை தராமலும் மோசடி செய்துள்ளார்.இதுகுறித்து, குமாரவடிவேல் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார். மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து, நவீனை நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.