கோவை:தேசிய வருவாய் வழி மற்றும் படிப்புதவித்தொகை திட்டத்தேர்வு (என்.எம்.எம்.எஸ்.,) மார்ச் 5ம் தேதி நடைபெறவுள்ள சூழலில், அரசு பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க முடியாத சூழல் தொடர்கிறது.மத்திய அரசு சார்பில் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு, என்.எம்.எம்.எஸ்., தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இதில், தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு, ஆண்டுக்கு, 12 ஆயிரம் ரூபாய் வீதம் பிளஸ் 2 வரை வழங்கப்படுகிறது. பிளஸ் 2 முடித்து செல்லும் மாணவர்களின் உயர்கல்விக்கு இத்தொகை பேருதவியாக உள்ளது. நடப்பாண்டுக்கான தேர்வு, மார்ச் 5ம் தேதி நடக்கவுள்ளது. தேர்வில் பங்கேற்பவர்களின் விபரங்கள் பதிவு, கட்டணம் செலுத்தவும் இணையதளம் வாயிலாக, பிப்., 2ம் தேதி வரை வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.ஆண்டுதோறும் எட்டாம் வகுப்பு வரை, நன்றாக படிக்கும் மாணவர்கள் பள்ளிகள் வாரியாக தேர்வு செய்யப்பட்டு, இத்தேர்வுக்கு பிரத்யேக பயிற்சி அளிக்கப்படும்.ஆனால், நடப்பாண்டில் எவ்வித பயிற்சியும் வழங்க அவகாசம் இல்லாத நிலை உள்ளது. தனியார் பள்ளிகளில் ஆன்லைன் வாயிலாக இத்தேர்வுக்கு வழிகாட்டுதல் வழங்கப்படுகிறது.ஆனால், இவ்வுதவித்தொகை அவசியம் தேவைப்படும் அரசு பள்ளி மாணவர்களுக்கு, பயிற்சி அளிக்க முடியாத சூழல் நிலவுகிறது.இதுகுறித்து, கல்வியாளர் மற்றும் பேராசிரியை வனிதா கூறுகையில்,'' என்.எம்.எம்.எஸ்., தேர்வுகளை சற்று ஒத்திவைக்க வேண்டும். அரசு பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகளுக்கு வாய்ப்பில்லை எனினும், தகுதியுடைய மாணவர்களை சம்பந்தப்பட்ட வகுப்பு ஆசிரியர்கள் தொடர்பு கொண்டு, உரிய வழிகாட்டுதல் வழங்க முயற்சி மேற்கொள்ள வேண்டும். தேர்வு எழுத உள்ள மாணவர்கள், 'யூ-டியூப்' தளத்தை பயிற்சிக்காக பயன்படுத்தலாம். பல்வேறு பயிற்சி வீடியோக்கள் இதில் இடம் பெற்று உள்ளன.மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், மாவட்டத்தில் தகுதியுடைய குறைந்தபட்சம் 50 அரசு பள்ளி மாணவர்களை தேர்வு செய்து, பிரத்யேக இறுதிகட்டபயிற்சி அளிக்க, ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தல் வழங்க வேண்டும்,'' என்றார்.